Published : 20 Oct 2022 06:18 AM
Last Updated : 20 Oct 2022 06:18 AM

மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கும் பணி; அண்ணா பல்கலையில் ரூ.77 கோடி முறைகேடு: தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பதில் ரூ.77 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மார்ச் 2021-உடன்முடிந்த ஆண்டுக்கான தணிக்கை துறை அறிக்கை:அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள், மதிப்பெண் தாள் மற்றும் மதிப்பீட்டுத்தரம் உள்ளிட்ட தொகுப்பு விவர அறிக்கை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க, ஜிஎஸ்டி லிமிடெட், மேட்ரிக்ஸ் இன்க் ஆகிய 2 நிறுவனங்களுடன் ரூ.11.41 கோடியில் தேர்வு கட்டுப்பாட்டாளரால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில், நிதி மற்றும் கணக்கு கையேட்டில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை தேர்வு கட்டுப்பாட்டாளர் மீறியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவாளர் மற்றும் கொள்முதல் குழுவால் செய்யப்பட வேண்டிய ஒப்பந்தத்தை, தேர்வு கட்டுப்பாட்டாளரே வழங்கியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற ஏலத்தில் மோசடிகளும் நடை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், பல்கலைக்கழகத்தில் இல்லாத கல்விப் பதிவேடுகளின் நகல்களை டிஜிட்டல் செய்யப்பட்டதற்கு, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவுகளில் இருந்து ஜிஎஸ்டி நிறுவனம் மூலம் 7,33,722 பதிவுகள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், 20,92,035 பதிவுகளை டிஜிட்டல் செய்ததாக அந்த நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்த பதிவையும் டிஜிட்டல் செய்யாத மேட்ரிக்ஸ் இன்க் நிறுவனத்துக்கு 1,20,000 பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வழங்கப்படாத சேவைகளுக்காக, ஒப்பந்ததாரருக்கு ரூ.11.41 கோடி பணம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போலிச் சான்றிதழ்கள் அச்சிடப்படுவதை தடுக்கும் வகையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வெற்றுச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு ஐஎஃப்எஃப் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ.65.46 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இந்நிலையில், இந்நிறுவனமும், ஜிஎஸ்டி நிறுவனமும் சகோதர நிறுவனம் என தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனம், ரூ.57.14 கோடி மதிப்பில் அதிகளவிலான வெற்றுச் சான்றிதழ்களை கொள்முதல் செய்துள்ளது. இந்நிலையில், சான்றிதழின் வடிவத்தை மாற்றியதால், ரூ.24.50 கோடி மதிப்பிலான சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. எனவே, மாணவர் பதிவேடுகளை முழுமையடையாத டிஜிட்டல் மயமாக்கல், வெற்று சான்றிதழ்களை அச்சடிப்பது தொடர்பாக என மொத்தம் சுமார் ரூ.77 கோடி முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்க தணிக்கைத்துறை பரிந்துரைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x