Published : 16 Oct 2022 03:52 PM
Last Updated : 16 Oct 2022 03:52 PM

சர்வதேச கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி: ஓசூர் வீரருக்கு சிறப்பு வரவேற்பு

நேபாளம் நாட்டில் நடை பெற்ற சர்வதேச அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி வீரர் ஓசூரைச் சேர்ந்த ஜெய்சாந்த், உடன் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்.

ஓசூர்: நேபாளம் நாட்டில் சர்வதேச அளவில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய ஓசூரைச் சேர்ந்த கால்பந்து வீரருக்கு ஓசூர் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாளம் நாட்டில் உள்ள பொக்காரோ நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு சார்பில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சர்வதேச அளவில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்தியா - நேபாளம் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி மற்றும் நேபாளம் நாட்டு கால்பந்து அணி ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

இதில் இந்திய கால்பந்து அணியில் தமிழ்நாட்டில் இருந்து ஓசூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரான ஜி.ஜெய்சாந்த் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். நேபாளம் நாட்டில் 10-ம் தேதி அன்று முதல் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 2 கோல்கள் அடிக்கப்பட்டது.

நேபாளம் அணி கோல் அடிக்கவில்லை. இதனால் 2-0 கணக்கில் முதல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வெற்றிபெற்றனர். அதேபோல 12-ம் தேதியன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் நேபாளம் அணி வீரர்கள் கடுமையாக போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்திய அணி சார்பில் 1 கோல் அடிக்கப்பட்டது.

இறுதியில் 1-0 என்ற முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டு கால்பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலை பெற்ற இந்திய அணியினர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்.

இந்த வெற்றியின் மூலமாக ஏசியன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியில் விளையாட ஓசூர் வீரர் ஜெய்சாந்த் தேர்வு பெற்றுள்ளார். நேபாளம் நாட்டிலிருந்து தங்கப்பதக்கத்துடன் பெங்களூரு வழியாக மெமு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓசூர் திரும்பிய இந்திய கால்பந்து அணி வீரர் ஜெய்சாந்த்-க்கு ஓசூர் ரயில் நிலையத்தில், ஓசூர் கால்பந்தாட்டம் பயிற்சியாளர் சி.பி.நாயர் மாலை அணிவித்து வரவேற்றார். உடன் ஓசூர் ரயில் நிலைய மேலாளர் குமரன் மற்றும் கால்பந்து வீரர் ஜெய்சாந்த் பெற்றோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x