Published : 12 Oct 2022 06:11 AM
Last Updated : 12 Oct 2022 06:11 AM

ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளை உயரமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் ஒதுக்கீடு பெற்று, தேவையானப் பொருட்களை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். பொருட்களின் நகர்வு, விநியோகத்தைக் கண்காணித்து, கிடங்குகள், கடைகளில்தேவையான அளவுக்கு இருப்புஇருப்பதை உறுதி செய்ய வேண்டும். இருப்பு குறைந்திருந்தால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.

அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசரகால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை தேவைக்கேற்ப இருப்புவைக்க வேண்டும். அவசரநிலையை எதிர்கொள்ளஅதிகப்படியான மண்ணெண்ணெய் இருப்புவைக்கத் தேவையான பேரல்களையும் வைத்திருக்க வேண்டும். வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்ல மாற்று வழித்தடங்கள், முன்னேற்பாடு விவரங்கள் அடங்கிய அவசரகால திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை மாற்றி, நல்ல பொருட்களை காலதாமதமின்றி அனுப்ப வேண்டும். மழையால் பாதிக்காதபடி, பொருட்களை வாகனங்களில் தார்பாய் கொண்டு, மூடி எடுத்த்து செல்லவேண்டும். மலைப் பிரதேசங்களான கொடைக்கானல், நீலகிரிமற்றும் வால்பாறையில், மழையின்போது மண் சரிவு ஏற்பட்டுபோக்குவரத்து பாதிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழையில் நனைந்த பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக புகார்வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பகுதிகள், ஆறு மற்றும் ஓடை போன்ற பகுதிகளில் மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்படும் முன்னரே, தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசென்று, பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் கூர்ந்துகண்காணிக்கப்பட வேண்டும். மேலும், கடந்த காலங்களில் பாதிப்புக்கு உள்ளான ரேஷன் கடைகளில் இந்த ஆண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில், மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை மேடான பகுதியிலோ அல்லது மரப்பலகைகள் அடுக்கிய உயரமான இடத்திலோ வைக்க வேண்டும்.

சென்னையில் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை, அருகில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை மற்றும் பிரத்யேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x