Published : 11 Oct 2022 04:59 AM
Last Updated : 11 Oct 2022 04:59 AM

அமைச்சர்கள், நிர்வாகிகளால் சங்கடம் - திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த பின்னணி?

சென்னை: திமுக பொதுக்குழுவில் தன் நிலை குறித்து தெரிவித்து, நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், பொதுக்குழு கூடியது. இதில், திமுக தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் வாழ்த்துரைகள், ஏற்புரைகளுக்குப்பின், நிறைவாகப் பேச வந்தார் ஸ்டாலின்.

பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை மதிப்புக்குரியவர்கள் என்று உயர்த்திய அவர் பேச்சு ஒரு கட்டத்தில் மாறியது. திடீரென ஆவேசமாக தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார். அப்போது அவர்,‘‘ஒரு பக்கம் திமுக தலைவர்; இன்னொரு பக்கம்தமிழக முதல்வர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போல் இருக்கிறது என்நிலைமை. இந்த சூழலில் இருக்கும் என்னை, மேலும் துன்பப்படுத்துவது போல் கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால், நான் என்ன சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்த புது பிரச்சினையையும் உருவாக்கிஇருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் ஆக்கி விடுகிறது. உங்கள் செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவதுபோல் அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும்,ஏளனத்துக்கும் ஆளானது’’ என்று தன் மன வேதனையை கொட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பெண்களுக்கான இலவச பேருந்தை ‘ஓசி’ என்று அமைச்சர் பொன்முடி கூறியது, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்பி ஒருவரை நிற்கவைத்து பேசியது மீதான விமர்சனம், இந்துக்கள் குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சு, மூத்த அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளானது போன்றவை முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர, உள்ளாட்சித் தேர்தலில் கூட்ட ணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு பதவி விலக மறுத்த நிகழ்வுகள், கட்சியின் பொதுத்தேர்தலில், இன்னும் தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு செயலாளரை அறிவிக்க முடியாத நிலை, மதுரையில் தலைமை நினைத்த ஒருவரை மாவட்டச் செயலாளராக்க முடியாத நிலை போன்றவையும் ஸ்டாலின் இவ்வாறு பேச காரணம் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

இதுதவிர, முதல்வர் தனது பேச்சில் ஆன்மிக உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பாஜக என விமர்சித்தார். அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காத மக்களால், பாஜக தமிழகத்தில் மூச்சுத் திணறி வருவதாகவும் பேசினார். அரசியலுக்கும், ஆட்சிக்கும், மதத்துக்கும் சம்பந்தமில்லாதது போல் அவர் பேசியிருந்தார்.

ஆனால், ஆட்சிக்கும், மதத்துக்கும் தொடர்புஉண்டு என்பதற்கு பாஜகவே சாட்சி. மதச்சார்புள்ள பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு, சில இடங்களில் தேக்கம் இருந்தாலும், பல இடங்களில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.

மதச்சார்பற்ற கட்சி திமுக என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டாலும், இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பார்வையை வெளிப்படுத்தும் விதமாகவே காட்சிகள் அரங்கேறுவதாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இதற்கு கட்சியின் நிர்வாகிகள், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து தீனி போட்டு வருவதும் உண்மையான திமுக விசுவாசிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. முக்கியமாக ‘இந்து’ மதம் குறித்த வெறுப்புப் பேச்சுகள், பாஜக விரிக்கும் வலைக்குள் தானாகப் போய்ச் சிக்குவதாகவே அமையும் என்றும் இந்த விசுவாசிகள் உறுதியாக நம்புகின்றனர்.

ஏற்கெனவே ஒருபுறம் நிதிநிலை பற்றாக்குறை காரணமாக தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நெருக்கடியை சந்திக்கும் நிலையில், மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதாக நினைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் செயல்களை ‘அரசியல் தந்திரம்’ என்று யாராவது தவறாக வியூகம் வகுத்து கொடுக்கிறார்களா என்றகேள்வியும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

அன்றாடம் களத்தில், அடிமட்ட மக்கள் மத்தியில் நெருங்கி நடமாடும் திமுகவினர், இந்த ஆட்சிக்கு மக்களிடம் தொடர்ந்து நற்பெயரை காப்பாற்றுவதற்கான பல யோசனைகளை மேல்மட்ட நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்தாலும், பதவியில் இருக்கும் திமுகவினர் அதற்கெல்லாம் காது கொடுப்பதில்லை என்ற வருத்தக் குரல்களையும் பரவலாகப் பார்க்க முடிகிறது.

அப்படி தங்கள் யோசனைகள் ஏற்கப்படாததை பல தடுப்பணைகளை மீறி திமுக தலைமைக்கு சிலர் எப்படியோ கொண்டு சென்றதன் விளைவுதான், பொதுக்குழுவின்போது கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை என்றும் கூறப்படுகிறது. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ’ திட்டத்தை அறிவித்து அதன் மூலம் 100 நாளில் குறைதீரும் என்று வாக்குறுதி அளித்தது திமுகவின் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வெற்றி பெற்ற பின் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று மாற்றப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் வரும் மக்களின் பிரச்சினைகளை முதல்வர் நேரடியாக எடுத்துப் பார்த்து உள்வாங்கிக் கொண்டாலே, இந்த திமுக ஆட்சி போக வேண்டிய சரியான திசை அவருக்குப் புரிந்துவிடும் என்கின்றனர் கட்சியின் விசுவாசிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x