Published : 11 Oct 2022 07:35 AM
Last Updated : 11 Oct 2022 07:35 AM
சென்னை: 116 பேர் முறைகேடாக தொலைதூரக்கல்வி படித்த விவகாரத்தில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் படித்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்காக அதனை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, தொலைதூரக் கல்வியில் சேருவதற்கு விண்ணப்பிக்காதவர்களும் தேர்வை எழுதி சான்றிதழ் பெற முயற்சித்தது தெரிந்தது.
அதன்படி, 116 பேர் பிகாம், பிபிஏ, பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வாயிலாக படிப்புகளில் சேராமலேயே சான்றிதழ் பெற முயற்சித்ததும், இதற்காக ஒவ்வொருவரிடமிருந்து பல லட்சம் வரை பெற்று இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணை குழு, சென்னை பல்கலைக்கழகத்திடம், அது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. அதன்பேரில் 2 உதவி பதிவாளர்கள், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் என 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2 பேர் ஏற்கெனவே ஓய்வுபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT