Published : 10 Oct 2022 06:21 AM
Last Updated : 10 Oct 2022 06:21 AM

முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்

முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.

சென்னை: முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். பொதுக் கூட்டங்களை வழி நடத்துபவராகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார்.

அன்றைய தினம் அதிமுகவின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்போர் விவரப் பட்டியலை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டிருந்தார். அதில், அக். 26-ம் தேதி திருவள்ளூரில் நடைபெறும் கூட்டத்தில் மைத்ரேயன் பங்கேற்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்ததால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து மைத்ரேயன் பெயர் நீக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. மைத்ரேயனை நீக்குவதாக இபிஎஸ் நேற்று அறிவித்துள்ளார்.

நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். ‘‘இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது’’ என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதற்கிடையே, எம்ஜிஆர் கொண்டுவந்த அதிமுக சட்ட விதிகளை இபிஎஸ் திருத்தியுள்ளதாக ஓபிஎஸ் பேசி வருகிறார். மைத்ரேயன் போன்றோர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். ஜேசிடி பிரபாகர், ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில், இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. அக்.17-ம் தேதி 51-வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கும் நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x