Published : 08 Oct 2022 01:24 PM
Last Updated : 08 Oct 2022 01:24 PM

“சைவம், வைணவம் இருந்ததும், அவற்றை இந்து சமயத்தில் இணைத்ததும் உண்மை” - நடிகர் சரத்குமார் 

நடிகர் சரத்குமார் | கோப்புப் படம்

சென்னை: “சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை, அந்தச் சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும்போது, இதற்குமேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? என பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.

1790-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களைச் சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது. சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும்போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும்போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும்போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோயிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x