Published : 08 Oct 2022 06:28 AM
Last Updated : 08 Oct 2022 06:28 AM
மதுரை: திருமங்கலம் அருகே 12 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் கோயிலை திறப்பது தொடர்பாக அறநிலையத் துறை 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சீனி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திருமங்கலம் மேலநேரியில் வாலகுருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. கோயிலைத் திறப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பினர் மத்தியில் சுமூகமான சூழல் உருவாகாத நிலையில் கோயில் திறக்கப்பட உள்ளதாக சிறப்பு அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவு: கோயிலுக்குள் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் மற்றும் உரிமையியல் வழக்குகள் உள்ளதால் கோயில் மூடப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்குகள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. கோயிலும் மூடப்பட்டுள்ளது. கோயில் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர 2011-ல் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். இருப்பினும் 11 ஆண்டுகளாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. தற்போது திடீரென கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கோயிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது.
பிரச்சினையைத் தீர்க்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டும் கோயில் நிர்வாகத்தை அறநிலையத் துறை கையகப்படுத்தவில்லை. இவ்வாறான சூழலில் கோயில் திறக்கப்படும் என வெளியிடப்பட்ட நோட்டீஸ் சட்டவிரோதமானது. இதனால் சிறப்பு அலுவலரின் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. கடவுள் வழிபாடு ஒவ்வொருவரின் தனியுரிமையாகும். இதனால் அறநிலையத் துறை இணை ஆணையர், அனைத்துத் தரப்பையும் அழைத்துப் பேசி, விசாரித்து கோயில் திறப்பு தொடர்பாக 6 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT