Published : 06 Oct 2022 09:41 PM
Last Updated : 06 Oct 2022 09:41 PM

பள்ளியின் சுற்றுச் சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

தி.மலை நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.83 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை: நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.83 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்று சுவரை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்புக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.83 லட்சம் மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இதற்கிடையில் கிராம சாலையை ஆக்கிரமித்து பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கேட்டு கொண்டதன் பேரில், சுற்று சுவரை வட்ட சார் ஆய்வாளர் மூலமாக மறு அளவீடு செய்து, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அதில், பள்ளி வளாகத்தின் அளவைவிட வடக்கு - தெற்காக உள்ள சாலையை ஆக்கிரமித்து மேல்புறமாக 2.4 மீட்டர் மற்றும் கீழ் புறமாக 5 மீட்டருக்கு சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சரியான அளவீட்டின்படி பள்ளியின் சுற்று சுவரை கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காந்திமதி, கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் தலையிட வலியுறுத்தல்

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் சுற்று சுவரை இடிக்கும் பணி இன்று (6-ம் தேதி) நடைபெற்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுற்று சுவர் இடிக்கும் பணி தடைபட்டது. அப்போது கிராம மக்கள் கூறும்போது, “மக்களின் வரி பணத்தில் ரூ.5.83 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுற்று சுவரை இடிக்கக்கூடாது. சுற்றுச்சுவர் கட்டுவதற்கு முன்பாக, சரியாக அளவீடு செய்யாதது யாருடைய தவறு. வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஏன் ஆய்வு செய்யவில்லை. ரூ.5.83 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுவரை சர்வசாதாரணமாக இடிக்கின்றனர். மறு அளவீடு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆய்வு செய்ய யார் வந்தார்கள், எப்போது வந்தார்கள்? யார் முன்னிலையில் ஆய்வு செய்தனர் என்பது மர்மமாக உள்ளது. இதேபோல், அவர்களது வீட்டின் சுவர் என்றால், இடித்து விடுவார்களா? சுற்று சுவர் இடிக்கும் பணியில் உள்நோக்கம் உள்ளது. இது குறித்து ஆட்சியர் முருகேஷ் நேரிடையாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கூடுதல் நிதி கிடையாது

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காந்திமதி, இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, “சாலையை ஆக்கிரமித்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது என வட்ட சார் ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், சரியான அளவீட்டின்படி, பள்ளியின் சுற்று சுவரை கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன். நீலந்தாங்கல் ஊராட்சியில் இன்று என்ன நடைபெற்றது என தெரியவில்லை. சுற்று சுவரை இடித்துவிட்டு, சரியான அளவீட்டின்படி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாது. ஏற்கெனவே விடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி சுற்று சுவரை கட்ட வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x