Published : 06 Oct 2022 09:11 PM
Last Updated : 06 Oct 2022 09:11 PM

மதுரை ‘எய்ம்ஸ்’ காலதாமதத்துக்கு மத்திய அரசின் அக்கறையின்மையே காரணம்: சு.வெங்கடேசன்

மதுரையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம்.

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்காததே பணிகள் தொடங்கப்படாததற்குக் காரணம் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள தோப்பூரில் இந்த மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எனினும், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.

அதேநேரத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துமவனைக்கான மாணவர் சேர்க்கை மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு நடத்தப்பட்டு வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முடிந்து பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கப்படாததால், மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடம் பொட்டல் காடாகவே உள்ளது. அதனை சுற்றி சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. திமுக அரசும், இந்த திட்டத்திற்கு பெரியளவில் அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து மதுரை எம்பி. சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது:

“5-வது கட்டமாக அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் பட்டியலில் மதுரையும், பிலாஸ்பூரும் இடம் பெற்றிருந்தன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. பிலாஸ்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து நட்டா இரு முறை எம்எல்ஏ-வாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், மத்திய அரசு பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனி கவனம் செலுத்தி கட்டுமானப் பணிகளை முடித்துள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக 100 சதவீதம் தன்னுடைய நிதியை வழங்கியிருக்கிறது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் பெறுகிறது.

தற்போது ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லாததால் கட்டுமானப்பணி தாமதமாகி வருகிறது. ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,200 கோடியில் மட்டுமே திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட காலதாமதத்தால் திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட தொகையில் 90 சதவீதத்தை தருவதற்கான ஒப்பந்தத்தில் ஜைக்கா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட தொகைக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. திட்ட மதிப்பீடு உயர்ந்ததால் மத்திய அரசு, தன்னுடைய நிதியில் இருந்து கூடுதலாக ரூ.70 முதல் 80 கோடி வரை வழங்க வேண்டும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கினால் மட்டுமே டெண்டர் விட முடியும். மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் டெண்டர் விடப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x