Last Updated : 25 Nov, 2016 08:01 AM

 

Published : 25 Nov 2016 08:01 AM
Last Updated : 25 Nov 2016 08:01 AM

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு: ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பெருமிதம்

வேறு எந்தப் பிரதமரும் இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்திருக்க முடியாது

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் சிறு வீழ்ச்சி ஏற்படும் என பொருளாதார நிபு ணரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பிரத மரின் இந்த நடவடிக்கை மூலம் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்ப தாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பை எதிர்பார்த்தீர்களா?

கடந்த 2009 மக்களவைத் தேர்த லுக்கு முன்பிருந்து கறுப்புப் பண ஒழிப்புக்காக குரல் கொடுத்து வரு பவர்களில் ஒருவன் என்ற முறையில் இதுபோன்ற நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்த்தேன். நீண்டகாலமாக இந்தியப் பொருளாதாரத்தை பாதித்து வந்த கறுப்புப் பொருளாதாரத்தின் மீது பிரதமர் மோடி தொடுத்திருக்கும் துல்லிய தாக்குதல் இது. இதுபோன்ற துணிச்சலான முடிவை வேறு எந்தப் பிரதமரும் எடுத்திருக்க முடியாது.

ஆனால், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து வங்கிகள், ஏடிஎம்களில் கோடிக்கணக்கான மக்கள் காத்திருக் கும் நிலை ஏற்பட்டுள்ளதே?

பிரதமர் அறிவிப்பு வெளியிட்டதும் வங்கிகள், அஞ்சலகங்களில் பணத்தை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வழிவகைகள் செய்யப் பட்டன. ஆனாலும், மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டது உண்மைதான். 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதுபோன்ற சிரமங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இது தற்காலிகமானதுதான்.

போதிய முன்னேற்பாடுகளை செய்தி ருந்தால் இந்த சிரமங்களை தவிர்த்தி ருக்கலாமே?

முன்னேற்பாடுகளை செய்துவிட்டு இது போன்ற ஓர் அதிரடி நடவடிக் கையை எடுக்கவே முடியாது. முன் கூட்டியே புதிய 500 ரூபாய் நோட்டு களை அச்சடித்திருந்தாலோ, புதிய ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை செய்திருந்தாலோ விஷயம் வெளியே கசிந்திருக்கும். எந்த ஊழல்வாதிகளை இந்த திட்டம் குறிவைக்கிறதோ அவர்களுக்கே செய்தி போயிருக்கும். அதன்பிறகு இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பலன் கிடைத்திருக்காது.

அறிவிப்பு வெளியாகி 16 நாட்களாகியும் நிலைமை சீராகவில்லை. இதை மோடி அரசின் நிர்வாகத் தோல்வி என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய் கின்றனவே?

நிலைமை சீராகிக் கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. நக்சலைட்கள் நிறைந்த பகுதி, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்குக்கூட பணம் பாது காப்பாக கொண்டு செல்லப்பட்டுள் ளது. எனவே, நிர்வாகத் தோல்வி என்பதை ஏற்க முடியாது. மக்களின் சிரமங்களைக் குறைக்க அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் கூறியதுபோல 50 நாட்களில் நிலைமை சாதாரணமாகும். பணத் தட்டுப்பாடு படிப்படியாக குறையும். அதுவரை ஏதாவது ஒரு வழியில் கஷ்டங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டம், பாஜக ஆதரவு தொழிலதிபர்களுக்கு முன் கூட்டியே தெரியும் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு. எல்லோரையுமே சந்தேகிக்கும் பத்திரி கைகள், ஊடகங்கள்கூட இந்த திட்டத்தை ரகசியமாக அரசு வைத் திருந்ததை பாராட்டி இருக்கின்றன. ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில் ஒருவருக்கு தெரிந்திருந்தாலே விஷயம் வெளியே வந்திருக்கும். இந்திய அரசியல் சூழலில் இந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது, மிகப் பெரிய விஷயம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணம் ஒழியாது. பொருளாதாரம்தான் வீழ்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனரே?

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.14 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே உள்ளன. இவற்றில் சுமார் ரூ.4 லட்சம் கோடி கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளதாக கணிக் கப்பட்டுள்ளது. தற்போதைய நடவடிக்கையின் மூலம் இந்த ரூ.4 லட்சம் கோடி அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை பினாமி பெயரில் யாராவது வைத்தால்கூட அரசு கண்டுபிடிக்க முடியும். கறுப்புப்பணம் வங்கியில் வந்துவிட்டாலே அது வெள்ளைப் பணம் தானே. இதனால் அரசின் நிதிப்பற்றாக்குறை குறையும்.

மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்வதால் வங்கிகளின் பண இருப்பு அதிகரிக்கும். இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களில் வங்கிகள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். தொழில்முனைவோருக்கு கிடைக்கும் கடன் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அதிகமாகி வேலைவாய்ப்புகள் பெரு கும். எனவே, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பது தவறானது. மனை வர்த்தகத்திலும், தங்கத்திலும் கறுப்புப் பணம் முடக்கப்படுவது வெகுவாகக் குறையும். லஞ்சம், ஊழலும் குறையும். ஆனால், அடுத்த 6 மாதங்களுக்கு பொருளாதாரத்தில் ஒரு சிறு வீழ்ச்சி ஏற்படவே செய்யும்.

அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடி வருகிறார்களே? நாடாளு மன்றம் முடக்கப்பட்டுள்ளதே?

கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் அரசியல்வாதி களும், லஞ்சத்தில் திளைத்துப் போன அதிகாரிகளும் நிலைகுலைந் துள்ளனர். எனவே, திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசியல்வாதிகள் போராடுவதில் ஆச்சரியம் இல்லை. இந்தத் திட்டம் நாட்டுக்கு நல்லது. இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தற்காலிகமானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். நாட்கள் செல்லச் செல்ல மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும்.

பணமதிப்பு நீக்கத்தை தேச பக்தியோடும், தேசப் பாதுகாப்போடும் தொடர்புபடுத்தி பாஜக தலைவர்கள் பேசுவது சரியா?

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அச்சடித்த கள்ளப்பணம் நம் நாட்டில் பயங்கரவாதத்தை வளர்க்கிறது என்பதற்கு எல்லா ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அதன் தாக்கம் இருக்கிறது. தீவிரவாதிகள் மூலமாக கொண்டு வரப்பட்ட கள்ளப்பணம் 5 முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த பயங் கரவாத தாக்குதலுக்கு ரூ.2.5 கோடி வரை மட்டுமே செலவு செய்யப் பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதன்மூலம் 164 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் அதிக மானோர் காயம்பட்டு முடமானார்கள்.

பயங்கரவாதத்தால் நாட்டுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.6.60 லட்சம் கோடி இழப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு புழக்கத்தில் விட்டுள்ள நமது 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதங்களாகிவிட்டன. இதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் பாகிஸ்தானின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். பிரதமர் மோடி மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியும் இதைத்தான் முதல் காரணமாக கூறியிருக்கிறது.

பணமதிப்பு நீக்கம் மிகவும் தவறான முடிவு. நிலைமை சீராக 7 மாதங்கள் ஆகும் என 10 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே?

படிப்படியாக சீராகும் என்பது உண்மை. ஆனால், 7 மாதத்துக்குப் பிறகு பொருளாதாரம் வேகமாக வள ரும் என்பதையும் அவர் கூறவேண்டும்.

சாதாராண மக்களிடம் உள்ள பணத்தை பெரு முதலாளிகளுக்கு கடனாக கொடுப்பதற்காகவே இந்தத் திட்டம் என்கிறார்களே?

இதுபோன்ற அப்பட்டமான பொய் களை கூற அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்.

இந்த நடவடிக்கையின் மூலம் ராகுல் காந்தி பிரதமராக மோடி வழிவகை செய்துவிட்டார் என பலரும் பேசத் தொடங்கியுள்ளனரே?

இது அசட்டுத்தனமான பேச்சு. இதுவரை நடந்த கருத்துக் கணிப்புப்படி மக்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்றே தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு இருந்தால் கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக வரிசையில் மணிக் கணக்கில் நின்றிருக்க மாட்டார்கள்.

ரொக்கம் இல்லாத இந்தியாதான் பிர தமர் மோடியின் நோக்கமா?

ரொக்கம் குறைவாகவும், வங்கிப் பரிவர்த்தனை அதிகமாகவும் இருக் கும் நாடு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும். ஒரே காலகட்டத்தில் இந்த முயற்சியை செய்வது ரொக்கம் இல்லாத நாட்டை உருவாக்க அல்ல. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை.

இவ்வாறு எஸ்.குருமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x