Published : 29 Sep 2022 07:45 PM
Last Updated : 29 Sep 2022 07:45 PM

அரசு வழங்கிய 500 இலவச ஆடுகளில் 250 இறப்பு: சாப்டூர் விவசாயிகள் புகார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: சாப்டூர் பகுதியில் அரசின் இலவச ஆடுகள் 500 வழங்கியதில் 250 இறந்துவிட்டன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு போதிய நிதி ஒதுக்கியும் தரமில்லாத நோயுள்ள ஆடுகளை வழங்கியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் த.விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கை விவரங்கள்:

விவசாயி பழனிச்சாமி: வைகை அணையிலிருந்து முன்னுரிமைப்படியும் முக்கியத்துவம் அளித்து கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும். கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடுகிறீர்கள். இதற்கு 58 கிராம பாசன கால்வாய்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த வார்த்தையை திரும்பப்பெற வேண்டும் என இருக்கையைவிட்டு எழுந்து பழனிச்சாமியை முற்றுகையிட்டனர். அப்போது ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் கூட்ட அரங்கத்துக்கு வரவில்லை. இதனால் வேளாண் இணை இயக்குநர் விவசாயிகளை சமரசம் செய்து இருக்கைகளில் அமர வைத்தார்.

சாப்டூர் தமிழ்ச்செல்வன்: தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி தரமான இலவச ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கியுள்ளார். அதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. சாப்டூர் பகுதியில் ஒருமாதத்திற்கு முன்பு 500 ஆட்டுக்குட்டிகள் வழங்கியதில் இதுவரை 250 ஆட்டுக்குட்டிகள் இறந்துவிட்டன. நோயுள்ள ஆடுகளை கால்நடைத்துறையினர் வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் விசாரித்து உடந்தையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நடராஜகுமார்: விவசாயிகள் முறையாக தீவனம் வழங்காததால் ஆடுகள் இறந்திருக்கும். ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதால் அதற்குரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவோம்.

தமிழ்ச்செல்வன்: அதிகாரிகள் பொய் சொல்கின்றனர். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கோடு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

ஆட்சியர்: முறையாக விசாரணை செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உசிலம்பட்டி பெருமாள்சாமி: உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிணறுகள் 50 ஆண்டுகளில் கிணறுகள் மண் மேவியுள்ளது. அதனை தூர்வாரவும், மோட்டார் அறைகள் கட்டவும் அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.

திருமங்கலம் சேகர்: புளியங்குளம் ஊராட்சி ஊத்துப்பட்டி கண்மாய்க்குரிய 20 அடி பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை அகற்றக்கோரி பலமுறை மனுக்கொடுத்தும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சியர்: ஆக்கிரமிப்பு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து பதில் அளிக்க வேண்டும்.

மாடக்குளம் பாலுச்சாமி: புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனது சொந்த நிலத்திலிருந்து 10 அடி அகலத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்பு செய்தவருக்கு கொடுத்துள்ளனர். அதனை ஆட்சியர் ஆய்வு எனது சொந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

ஆட்சியர்: வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நாளை மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.

வாடிப்பட்டி கருணாகரன்: அரசு நெல் கொள்முதல் மையங்களுக்கு அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், விதை நெல்லை தூற்றுவதற்கும், மூடைகளை ஏற்றி இறக்கும் கூலியையும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ. 5-க்கு மேல் வசூலிப்பதால் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் நெல் கொள்முதல் மையம் இருப்பதையும் தடுக்க வேண்டும்.

ஆட்சியர்: விவசாயிகளிடமிருந்து எந்த வகையிலும் பணம் வசூலிக்கக்கூடாது. வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சாப்டூர் பாலு: சாப்டூரில் உள்ள பெரிய கண்மாயில் ரூ.80 லட்சத்திற்கு மராமத்துப்பணிகள் தரக்குறைவாக முறைகேடாக நடக்கின்றன.

ஆட்சியர்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து தரமான பணிகள் செய்ய வேண்டும். அடுத்தவாரம் நானே நேரில் ஆய்வு செய்கிறேன்.

மாடக்குளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்: மாடக்குளம் கண்மாயில் தண்ணீ்ர தேக்குவதன் மூலம் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்கு மீன்பிடி குத்தகைக்கு விடக்கூடாது.

ஆட்சியர்: சங்கத்தின் மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தாருங்கள். உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

உசிலம்பட்டி செளந்திரபாண்டி: கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இடைத்தரகர்களாக செயல்படுவோர் ஒவ்வொரு விவசாயியிடமும் ரூ.2 ஆயிரம் வசூலித்து கடந்தாண்டு கொடுத்தனர். தற்போதும் வசூலிப்பதை தடுக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்.

ஆட்சியர்: விவசாயிகளிடம் பணம் வசூலிக்கக்கூடாது.

இத்துடன் கூட்டம் முடிவடைந்தது.

ஆட்சியருக்கு விவசாயிகள் மரக்கன்று பரிசு: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் வழக்கமான பதில் அளிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்று மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பேசினர். இதற்கு விவசாயிகள் கைதட்டி வரவேற்றனர். பொதுவாக விவசாயிகளை அதிகாரிகள் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் நடத்துகின்றனர். இதற்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் இதுவரை நடந்த கூட்டத்தில் பேசாத ஆட்சியர் இந்த கூட்டத்தில் பேசியுள்ளார். இதற்கு விவசாயிகள் தரப்பில் வரவேற்கிறோம் என்றனர். பின்னர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்து மரக்கன்று வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x