Last Updated : 02 Nov, 2016 12:34 PM

 

Published : 02 Nov 2016 12:34 PM
Last Updated : 02 Nov 2016 12:34 PM

மக்களின் பொதுப் பிரச்சினைகளை தீர்க்கும் செல்போன் செயலி : செயல்பாட்டில் கோவை மாநகராட்சி முன்னிலை

உங்கள் வீட்டின் அருகே பல நாட்களாக குப்பை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறதா? நீங்களே அதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிந்து கொள்ளவும் 'ஸ்வச்சட்டா' என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியைப் பயன்படுத்துவதிலும், மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதிலும் கோவை மாநகராட்சி முன்னிலையில் இருக்கிறது. மேலும், இந்த வசதியை மக்களிடம் விளம்பரப்படுத்தினால் பலர் கூடுதலாக பயனடைவார்கள் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களே தங்களது பிரச்சினைகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் தெரிவிக்க வசதியாக மத்திய ஊரக நகர்ப்புற அமைச்சகம் சார்பில் ‘ஸ்வச்சட்டா - (swachhata)’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்போனில் இந்த செயலியை இயக்கி, அதிலிருந்தே பொதுப் பிரச்சினைகளை புகைப்படமாக எடுத்து அதில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படும் புகைப்படங்களைப் பார்த்து, சம்பந்தப்பட்ட பகுதி உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் அதை உடனே சரிசெய்துவிடுவார்கள்.

கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக இந்த செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் பட்டியலிலேயே கோவை இடம் பெற்றிருப்பதால், இந்த முன்னோடித் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புகார்களை விரைவில் சரிசெய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னிலையில் கோவை

கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த செயலியில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நகரின் தூய்மையைக் கருத்தில் கொண்டு சுத்தப்படுத்தப்படாத குப்பை, விலங்குகள் இறந்து கிடப்பது, பொதுக்கழிப்பிட பிரச்சினை, குப்பைத் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள நகரங்கள் மட்டுமல்லாமல் மேலும் பல நகரங்கள் என சுமார் 4000-க்கும் மேற்பட்ட பகுதிகள் இந்த செயலியில் இணைக்கப் பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் அனைவரும் இந்த செயலியை செல்போனில் தரவிறக்கம் செய்து, தங்களது நகரம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, தங்கள் பகுதி பிரச்சினைகளை புகைப்படமாக எடுத்து பதிவு செய்ய வேண்டும். ஜியோ - லொகேஷன் வசதி மூலம் புகைப்படமாக எடுக்கப்படும் இடம், தெளிவாகப் பதிவாகிவிடுகிறது. அதனுடன் பிரச்சினை உள்ள இடத்தின் முகவரியையும் மக்கள் கொடுத்துவிடுவதால், மாநகராட்சி ஊழியர்கள் எளிதில் அங்கு சென்று புகார்களை சரி செய்து விடுகிறார்கள். புகார்களை நிவர்த்தி செய்தவுடன், நாங்கள் அதை புகைப்படம் எடுத்து, ‘பிரச்சினை சரிசெய்யப்பட்டது’ என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

புகார்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் விடப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும், நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கோவையில் அனைத்து புகார்களையும் உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம்.

கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், இந்த செயலியின் பயன்பாட்டில் சிறப்பான பங்களிப்பைச் செய்து, முன்னிலையில் இருந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் புகாருடன் பதிவு செய்திருந்த புகைப்படம். (அடுத்த படம்) புகார் கூறப்பட்ட இடம் சுத்தப்படுத்தப்பட்டு புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தெரிய வேண்டும்

ஸ்வச்சட்டா செயலி பயன்பாடு குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற வாசகர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இந்த திட்டம் எப்படி பயனளிக்கும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதில் நாம் கூறும் புகார் மீது நடவடிக்கை எடுத்து, அதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் ஸ்வச்சட்டா செயலியிலேயே வெளியிடுகிறார்கள். இது நமக்கு திருப்தியைத் தருகிறது. ஆனால் இப்படி ஒரு செயலி இருக்கிறது என்ற செய்தியே பலருக்கும் தெரியாது. முறையாக விளம்பரப்படுத்தினால் பொதுமக்கள் அனைவரும் பயனடைவார்கள். அதை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x