Published : 26 Sep 2022 06:40 AM
Last Updated : 26 Sep 2022 06:40 AM

அரசியல் சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூருக்கு நடைபயணம் தொடக்கம்: திக்விஜய் சிங் தொடங்கி வைத்தார்

அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் நடைபயணத்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேற்று தொடங்கி வைத்தார். உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், திருநாவுக்கரசர் எம்.பி., ராஜேஷ் லிலோத்தியா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில்இருந்து பெரும்புதூர் வரையிலான 3 நாள் நடைபயணத்தை கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தொடங்கி வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மாநில அளவில் நடைபயணம் நடத்தப்படும் என தமிழககாங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 3 நாட்கள் நடைபயணத்தின் தொடக்க விழா, சென்னைசத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்திக்விஜய் சிங், பலூன்களைபறக்கவிட்டு நடைபயணத்தைதொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

மூத்த தலைவர் திக்விஜய் சிங்: இந்தியாவில் 7 பெரிய மதங்கள், 22 அலுவல் மொழிகள், 100-க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் உள்ளன. வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவில் அனைத்து பிரிவினருக்கும் சம உரிமையை உறுதி செய்யவே அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதகம் ஏற்படும் சூழலில், அதை பாதுகாக்க நடைபயணம் மேற்கொள்கிறோம்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். அவரது பயணம் முடிந்த மாநிலங்களில், இதுபோல மாநில அளவிலான நடைபயணத்தை தொடங்கி, பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைக்கும் கருத்துகளை ஒவ்வொரு குக்கிராமங்களிலும், தெருத் தெருவாக, வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வகையிலான இந்த நடைபயணம், ஒரு நாளுக்கு 25 கி.மீ. என, 3 நாட்களில் பெரும்புதூரை அடையும். காங்கிரஸ் எஸ்.சி. அணி உள்ளிட்ட 8 துணை அணிகள் இணைந்து நடைபயணம் மேற்கொள்கின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியது 7 பேர் கொண்ட குழு. அதன் தலைவராக அம்பேத்கர் இருந்தார். அந்த 7 பேரில் 2 பேர் தமிழர்கள். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியதில் தமிழகத்துக்கும் பங்கு உண்டு. மாநிலங்களவையில் பிரதமர் மோடிக்கு 3-ல் 2 பங்கு பலம் இல்லை. இருந்திருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியோ, சிதைத்தோ இருப்பார். பாஜகவின் அரசியல் சாசன சிதைப்புக்கு எதிரான உணர்வு மக்கள் மத்தியில் எழ வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் வல்லபிரசாத், இந்திய ஒற்றுமை பயண தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.ராஜு, மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x