Published : 24 Sep 2022 07:32 AM
Last Updated : 24 Sep 2022 07:32 AM
சென்னை: பூமியைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று சென்னை விஐடி பல்கலை.யின் உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் தெரிவித்தார்.
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘டெக்நோ’ தொழில்நுட்ப விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 6-வது முறையாக நடப்பாண்டுக்கான ‘டெக்நோ-விஐடி-22’ தொழில்நுட்ப விழா சென்னையில் உள்ள பல்கலை. வளாகத்தில நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் விஐடி பல்கலை. உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் பேசும்போது, ‘‘நம் பூமியைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நுகர்வோர் மற்றும் குடிமக்கள் என்ற முறையில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு செயல்பட்டு நமதுவாழ்க்கையை மேலும் நிலையானதாக மாற்ற முயற்சி செய்வோம். அதன் ஒரு பகுதியாகவே இந்ததொழில்நுட்ப விழா சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை கருவாக கொண்டு நடைபெறுகிறது’’ என்றார்.
விழாவில் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் (மனித ஆற்றல்) ஆர்.நாகேஷ்வர் ராவ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘‘மாணவர்கள் தங்களின் புதிய யோசனைகளை செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். புதுமையான கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு யோசனை உருவாக்கம், மேலாண்மை மாற்றம் மற்றும் வடிவமைப்பு சிந்தனை ஆகிய படிநிலைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
வெர்சுசா மென்பொருள் சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நாராயணன் சுந்தரேசன் பேசுகையில், ‘‘மாணவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தங்களின் திறமைகளை மாற்றிக்கொண்டு தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்த முன்வர வேண்டும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிசெய்யவும், புதுமையான யோசனைகளை உருவாக்குவதிலும் ஆர்வமுடன் செயலாற்ற வேண்டும்’’என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விஐடி பல்கலை.இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், இயக்குநர் வி.ராஜசேகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் டெக்நோ விழாவில் 800-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT