Published : 28 Nov 2016 09:36 AM
Last Updated : 28 Nov 2016 09:36 AM

நாமக்கல்லில் திடீர் சோதனை: நூற்பாலையில் பணியாற்றிய 41 சிறுமிகள் மீட்பு

நாமக்கல் அருகே தனியார் நூற்பாலையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பணியில் அமர்த்தப்பட்டிருந்த 41 சிறுமிகளை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர்.

நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. ஆலையில் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், உரிய அடிப்படை வசதி கள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் நாமக்கல் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் செய்யப் பட்டது.

அதையடுத்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.ராஜசேகரன் தலைமையில் வருவாய் துறையினர், காவல் துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பந்தப்பட்ட தனியார் நூற்பாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

அப்போது திருவண்ணாமலை, கரூர், சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 முதல் 18 வயதிற்குட்பட்ட 41 சிறுமிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் சிறுமிகள் உடல், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 41 சிறுமிகளும் ஆலையில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டதுடன், சொந்த ஊருக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சிறுமிகளுக்கு முன் பணம் கொடுத்து பணியமர்த்தியிருந்தால், சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தினர் மீது கொத்தடிமை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x