Last Updated : 10 Nov, 2016 11:19 AM

 

Published : 10 Nov 2016 11:19 AM
Last Updated : 10 Nov 2016 11:19 AM

கோவையில் பண அட்டை பயன்பாடு அதிகரிக்கவில்லை: வணிகர்கள் வேதனை

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கோவையில் நேற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதித்தது. அதேசமயம் ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பண அட்டைகளை மக்கள் யாரும் அதிகமாக பயன்படுத்தவில்லை என்று வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரியகடைவீதி, டி.கே.மார்க்கெட், எம்ஜிஆர் மார்க்கெட் ஆகிய வணிக மையங்களில் கடைகள் திறந்திருந்தாலும், வியாபாரம் குறைவாகவே இருந்தது. 100 ரூபாய் தாள் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக நிறுவனங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற மறுத்துவிட்டன. நாளிதழ் செய்திகளையும், நோட்டீஸ்களையும் கடைகளுக்கு முன்னர் வைத்திருந்தனர்.

வியாபாரம் குறைந்தது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் பெரிய, சிறிய வணிகர்கள் உள்ளனர். ரூபாய் நோட்டு அறிவிப்பால் கலக்கமடைந்த வியாபாரிகள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏற்கவில்லை. இதனால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வியாபாரம் நடந்தது.

பெரிய வியாபாரிகள் வியாபாரம் முடித்து பல லட்ச ரூபாயை கையிருப்பில் வைத்துள்ளனர். அதை வங்கியில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகள் கேட்கும்போது, தேவையற்ற விசாரணை, பறிமுதல் நடவடிக்கைகள் இருக்குமோ என அச்சம் உள்ளது. கையிருப்பில் பணம் இல்லாவிட்டால், பலரும் பண அட்டைகளை பயன்படுத்த லாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பண அட்டைகளை அதிக அளவில் யாரும் பயன்படுத்தவில்லை’ என்றார்.

உணவக உரிமையாளர்கள் சங்க கவுரவ ஆலோசகர் ஏ.ராமசாமி கூறும்போது, ‘450 பெரிய உணவகங்கள் உள்பட சுமார் 10,000 உணவகங்கள் கோவையில் உள்ளன. நேற்று ஒரு நாள் மட்டும் 40 சதவீத விற்பனை குறைந்தது. பணம் இருந்தும், அதை பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால் பலரால் உணவு உண்ணமுடியவில்லை.

கோவையில் சுமார் 30 சதவீதம் பேர் பெரிய உணவகங்களில் பண அட்டைகளையும், கடன் அட்டைகளையும் பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த நெருக்கடியான சுழலில் அதன் பயன்பாடு அதிகரிக்கவில்லை’ என்றார்.

பெட்ரோல் பங்க்களில் பணப் பரிவர்த்தனை நடக்கும் என அறிவிக்கப்பட்டாலும், அங்கும் 100 ரூபாய் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே ரூ.500, ரூ.1000 கொடுத்தால் அதற்கு முழுமையாக பெட்ரோல் அடித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டது. அதேபோல அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், சமையல் எரிவாயு விநியோகம், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் கடும் சிக்கல் நிலவியது.

மண்டிகளில் பாதிப்பில்லை

நீலகிரியிலிருந்து கொண்டு வரப்படும் மலைக்காய்கறிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மொத்த காய்கறி ஏல மண்டிகளில் மொத்தமாக விற்பனையாகின்றன. அதில் 80 சதவீதம் கேரளத்துக்கு ஏற்றுமதியாகிறது.

டன் கணக்கில் மொத்தமாக காய்கறிகள் ஏற்றுமதியாவதால் பணப் பரிவர்த்தனைகள் முழுவதும் வங்கிக் கணக்குகள் வழியாகவே நடக்கின்றன.

எனவே இந்த மொத்த ஏல மண்டிகளில் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கவில்லை. சில்லறை விற்பனைகள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகின.

வீணாவதை தவிர்க்க உணவு இலவசம்

கோவை அண்ணா சிலை அருகே உள்ள உணவகவத்தின் உரிமையாளர் மணி என்பவர் கூறும்போது, ‘ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வழக்கம்போல வியாபாரம் நடக்கவில்லை. ஆனால் சமைக்கப்பட்ட உணவுகள் வீணாகக்கூடாது என்பதால் கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு சில்லறை கொடுக்க முடியாததால் சிரமமாக இருக்கிறது. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு உணவு கொடுக்கிறோம். பிரச்சினை தீர்ந்ததும் பணத்தை பெற்றுக் கொள்வோம்’ என்றார். காந்திபுரம், கரும்புக்கடை பகுதிகளில் உள்ள சில சிறு உணவகங்களில் உணவுப் பொருட்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, சில்லறை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி உணவுகளை இலவசமாகவே வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x