Published : 09 Sep 2022 06:25 AM
Last Updated : 09 Sep 2022 06:25 AM

உடுமலை அருகே பூச்சிகொட்டாம்பாறையில் நிலச்சரிவு அபாயத்தில் மலைவாழ் மக்கள்

திருப்பூர்: உடுமலைப்பேட்டை மலைப் பகுதியிலுள்ள பூச்சிக்கொட்டாம்பாறை செட்டில்மெண்ட் மேற்பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாலும், அங்கு வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாலும் மலைவாழ் மக்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி, மாவட்டச் செயலாளர் கோ.செல்வன் ஆகியோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்துக்கு அனுப்பிய கடிதம்:

உடுமலைப்பேட்டை மலைப்பகுதியிலுள்ள பூச்சிகொட்டாம்பாறை வனக் குடியிருப்பில் 35-க்கும் மேற்பட்ட முதுவன் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கடந்த 14-ம் தேதி இரவு கனமழை பெய்தபோது, சுமார் 12 மணியளவில் குடியிருப்புக்கு மேல் பகுதியிலுள்ள மலையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறை கற்கள் உருண்டு ஊருக்குள் வந்தன.

ஊரின் மேல் பகுதியிலுள்ள வசந்தம்மாள் என்பவரின் வீட்டுக்கு அருகே உள்ள பலா மரம் மீது மோதி பாறை கற்கள் நின்றன. பலா மரம் தடுக்காமல் இருந்திருந்தால், பாறைகள் உருண்டு வந்து குடியிருக்கும் வீடுகளை சேதப்படுத்தி, மக்கள் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

தற்போதும் கனமழை பெய்வதால், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கக்கூடிய இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய கற்கள், பாறைகள் எப்போது வேண்டுமானாலும் உருண்டு வரும் அபாயம் உள்ளது.

அவ்வாறு நிகழ்ந்தால், செட்டில்மெண்டில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடையும். மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இதனால், அங்குள்ளவர்கள் இரவு நேரங்களில் வீடுகளில் தங்குவதில்லை. எனவே, இவர்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x