Published : 08 Sep 2022 06:59 AM
Last Updated : 08 Sep 2022 06:59 AM

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 45,988 மாணவர்கள் பங்கேற்றனர்.

தேசிய தேர்வு முகமையிடம் (என்டிஏ) இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 110 மனநல ஆலோசகர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களில் 564 பேர் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் தேசிய நலவாழ்வுக் குழுமம் சார்பில், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மனநல ஆலோசகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.

அதேபோல, அனைத்து பள்ளி ஆசிரியர்களும், தங்களின் மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, மன அழுத்தத்தில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை, மாவட்ட மனநல ஆலோசகர்களுக் குத் தெரிவிக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இந்த தகவலைக் கொண்டு, மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர் மற்றும் அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கி, தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

மேலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அடுத்து அவர்கள் என்ன செய்யலாம், என்ன படிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்படும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக, முதல்வர் தொடர்ச்சியாக மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்து, அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

நீட் தேர்வில் தங்கள் குழந்தை தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக, அக்குழந்தைகள் மீது பெற்றோர் கோபத்தைக் காட்ட வேண்டாம். வேறு வழி இல்லாததால்தான் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x