Published : 08 Sep 2022 07:14 AM
Last Updated : 08 Sep 2022 07:14 AM

ராகுல் காங்கிரஸ் தலைவராக வருவது பாஜகவுக்கு நல்லது: அண்ணாமலை கருத்து

காரைக்குடி: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வருவது நிச்சயமாக பாஜகவுக்கு நல்லது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் கூறியதாவது: ராகுல் காந்தி இந்தியாவை இணைப்பதற்காக யாத்திரை செல்வதாகக் கூறுகிறார். அவர் யாத்திரை செல்லும்போதே பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா எவ்வாறு முழுமையாக இணைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வார். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் முழுமையாக இணைந்துள்ளதை அறிவார்.

காங்கிரஸில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்று அறிவித்தனர். ஆனால், சிவகங்கையில் ஒரே குடும்பத்தில் தந்தை ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எம்பி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக காங்., தலைவர் அழகிரியிடம் கேட்டால் இருவருக்கும் வெவ்வேறு ரேஷன்கார்டு இருப்பதாக கூறுகிறார். பேச்சு வேறு; செயல் வேறு; இதுதான் காங்கிரஸ்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பெரும் போட்டியே நடந்து வருகிறது. என்ன நாடகம் நடத்தினாலும் அடுத்த தலைவர் ராகுல்தான். இது எல்லோருக்கும் தெரியும். எதிர்ப்பதும், ஆதரிப்பதும் எல்லாம் நாடகம்தான். காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை. ராகுல் தலைவராக வருவது நிச்சயமாக பாஜகவுக்கு நல்லது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 450 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. சிவகங்கை தொகுதியில் பாஜக உறுப்பினர் ஒருவர் தேர்வாகி மக்களவைக்குச் செல்வார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x