Published : 20 Oct 2016 12:47 PM
Last Updated : 20 Oct 2016 12:47 PM

சுற்றுலா பயணிகளிடம் நெருங்கிப் பழகிய காட்டு யானை: முதுமலை மாவனல்லாவில் ஓர் அதிசயம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டு ஆண் யானை, சுற்றுலாப் பயணிகளிடம் நெருங்கிப் பழகி, அவர்களை மகிழ்வித்தது.

அந்த யானையின் பெயர் ரிவால்டோ. இதற்கு இந்தப் பெயர் வந்ததே சுவாரசியமான தகவல். மாவனல்லா சீகூர் வனப் பகுதியில் உள்ள சேடாபட்டியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர், 13 ஏக்கரில் தோட்டம் வைத்திருந்தார். தனியாக வசித்த இவர், விலங்குகள் மீது பற்றுடன் இருந்தார்.

அந்த வழியாகச் செல்லும் யானைகளுக்குத் தேவையான புல், வாழை, பலா உள்ளிட்ட வற்றை, பாதையில் வைத்திருப் பார். அவர் வைத்திருக்கும் தர்பூசணியை விரும்பி உண்ண வரும் யானைகள், அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் அருந்திச் செல்லும். எனினும், இவற்றைக் காண யாரையும் அவர் தோட்டத் துக்குள் அனுமதிக்கமாட்டார்.

சுவையான உணவைச் சாப்பிட வந்த சில யானைகள் அவருடன் நன்கு பழகின. அவற்றுக்கு “ரொனோல்டா, ரிவால்டோ, ரீட்டா” உள்ளிட்ட பெயர்களை வைத்தார். ஒருநாள் ரிவால்டோ மட்டும், தர்பூசணியை சாப்பிட முடியாமல் தவித்தது. உற்றுப் பார்த்தபோதுதான், அதன் தும்பிக்கையின் முனை சுமார் 9 அங்குல நீளத்துக்கு வெட்டப்பட்டு, ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தர்பூசணியை பெரிய கம்பில் கட்டி, யானையின் வாய்க்கு அருகில் கொண்டுசென்று கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களிலும் இவ்வாறே தீவனம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அதன் தும்பிக் கைக்கு கீழே சீழ்பிடித்து விட்டது. தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர், உரிய சிகிச்சை அளித்தார். பின்னர், இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, தும்பிக்கை புண் ‘செப்டிக்’ ஆகாமல் இருக்க மாத்திரை அளித் தனர். பின்னர், ரிவால்டோவுக்கு சரியாகி விட்டது. எனினும், உணவை துதிக்கையால் எடுத்துச் சாப்பிட அதனால் இயலவில்லை.

புல் கட்டை சாப்பிட அந்த யானை மிகவும் சிரமப்பட்டதால், தோட்டக்காரரும், கால்நடை மருத்துவரும், யானைக்கு உணவை ஊட்டிவிட்டனர். அவர்களுடன் நன்கு பழகிய ரிவால்டோ, திடீரென்று காணாமல் போய்விட்டது.

சில நாட்களுக்குப் பின் அங்கு வந்த ரிவால்டோ, மீண்டும் வாரக்கணக்கில் காணாமல்போனது.

இதுகுறித்து ஆய்வு செய்த போது, வனத் துறைப் பணியாளர் ஒருவரிடம் ரிவால்டோ நெருங்கிப் பழகியதையும், அவர் யானையை சுற்றுலாப் பயணிகளிடம் காண்பித்து, யானைக்கு பழங்கள் வாங்கிக் கொடுத்ததும், பயணிகளை யானைக்கு அருகில் நிறுத்தி, புகைப்படங்கள் எடுத்து அளிப்பதும், அதில் வருமானம் பார்ப்பதுமாக இருப்பதை கவனித்தனர். இதைப் பார்த்த மற்றொரு வன ஊழியரும், ரிவால்டோவை வருமானம் ஈட்டப் பயன்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், இரு ஊழியர்களில் ஒருவர், அங்கிருந்த குழியில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை ரிவால்டோதான் கொன்றது என்று புரளி கிளம்பியது. இதனால், ரிவால்டோ அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சத்துக்குள்ளா கினர். எனினும், பசியெடுத்தால் போதும், சாலையோரம் ரிவால்டோ வந்து நின்றுவிடும். யாராவது, ஏதாவது தருவார்களா? என்று ஏக்கத்துடன் பார்க்கும்.

யானை அடிக்கடி ஊருக்குள் வந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, “ரிவால்டோ ஏற்கெனவே ஒருவரை கொன்றுவிட்டது. எங்களையும் தாக்கக்கூடும்.

குழந்தைகள் பள்ளி செல்லவே பயப்படுகின்றனர்” என்று தெரிவித் தனர். ஆனால், தன்னார்வலர்கள் சிலர், “ரிவால்டோ அப்பிராணி. யாருக்கும் தீங்கு செய்யாது” என்றனர்.

ஏக்கமும்…ஏமாற்றமும்…

இதற்கிடையே, ரிவால்டோவுக்கு பெயர் வைத்த தோட்டக்காரர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனினும், ரிவால்டோ அவ்வப்போது அந்த தோட்டத்துக்குச் சென்று, ‘தோட்டக்காரர் தர்பூசணி ஊட்டி விடுவாரா’ என்று எதிர்பார்த்து, நாள் கணக்கில் நிற்கும். பின்னர், ஏமாற்றத்துடன் சாலைக்கு வந்து, யாராவது உணவு கொடுப்பார்களா என்று ஏக்கத்துடன் பார்க்கும்.

ரிவால்டோவின் இந்த செயல் பலருக்கு பீதியையும், சிலருக்கு அனுதாபத்தையும், சிலருக்கு வருமானத்தையும் தந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “ரிவால்டோவுடன் இருக்கும் படத்தை சிலர் வீட்டில் மாட்டி வைத்துள்ளார்கள். சிலரோ, ஆபத்தான விலங்கான ரிவால்டோவை வனத் துறையினர் பிடித்து, முகாமில் அடைக்க வேண்டும் என்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், ரிவால்டோவைத் தேடுகின்றனர்.

இதையெல்லாம் அறியாத ரிவால்டோ, உணவு தேடி பல இடங்களுக்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x