Last Updated : 01 Sep, 2022 01:05 PM

 

Published : 01 Sep 2022 01:05 PM
Last Updated : 01 Sep 2022 01:05 PM

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் 

திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.

கோவை: "பெண்களுக்கு இலவச பேருந்து ,பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும்" என கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவருமான பொங்கலூர் பழனிசாமி - கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் ஆகியோரது இல்லத் திருமண விழா கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (1-ம் தேதி) நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இது ஒரு சீர்திருத்த திருமணமாக , சுயமரியாதை உணர்வோடு, தமிழ் திருமணமாக நடந்து இருக்கிறது. இது போன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டுக்கு முன்பு சட்டப்படி உரிமையில்லை. பின்னர், அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி 6-வது முறையாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றது .

70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றியுள்ளோம் என கூறவில்லை. ஆனால், 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள 30 சதவீத வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதை மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 4 நாட்களுக்கு முன்பு கோவை வந்த போது மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அப்போது மனுக்களையும் அளித்தனர்.

மனுக்களை கொடுக்கும் போது, அதை நிறைவேறி விடும் என மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மனுக்களை பெற்றுக்கொண்டோம். ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம். ஆட்சிக்கு வந்த பின்னர், இதற்காக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம். 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு ஆய்வு செய்து வருகின்றேன்

ஜெ மரண அறிக்கை

எந்த பாகுபாடும் இன்றி 234 தொகுதி எம்.எல்.ஏக்களும் பிரச்சினைகள் குறித்த தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அப்போது ஒப்புக்காக ஒரு கமிஷன்(ஆணையம்) அமைத்தார் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி. திமுக ஆட்சி அமைத்தவுடன் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதை இப்போது சொல்ல மாட்டேன். சட்டப்பேரவையில் வைத்து அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டப்பேரவையில் வைக்க இருக்கின்றோம். சட்டப்பேரவையில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

உரிமைத் தொகை

தேர்தல் உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சொல்கின்றார். பெண்களுக்கு இலவசப் பேருந்து ,பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமைத் தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x