Published : 29 Aug 2022 01:14 PM
Last Updated : 29 Aug 2022 01:14 PM

பெற்றோர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: " பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை பிள்ளைகளுக்கு சொல்லலாம், வழிகாட்டலாம், தவறு கிடையாது. ஆனால், திணிக்கக்கூடாது. தாய், தந்தையின் ஆசைகளுக்காக பல படிப்புகளில் சேர்கின்ற பிள்ளைகள் பின்னர் மனதளவில் சோர்வடைகின்றனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், மாபெரும் திறம் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசுகையில், " தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில், அறிவியலில், அறிவில், ஆற்றலில் தனித்திறமைகளில் தலைசிறந்து நிற்க வைக்க தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டம்தான் 'நான் முதல்வன்' திட்டம்.

நான் மட்டும் முதல்வன் இல்லை. அனைவரும் ஒவ்வொரு வகையில் முதல்வனாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்தத் திட்டம். இது என்னுடைய கனவுத் திட்டம். அந்தத் திட்டம் என் கண் முன்னால் மாபொரும் வளர்ச்சியைடந்து வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

அனைத்து துறையினுடைய வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி என்ற திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியாக இருந்து வருகிறது. இதையறிந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் போட்டிப்போட்டிக்கொண்டு தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும், புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டு உள்ளனர்.

இது தொழில்வளம் இல்லை என்ற நிலையையும், வேலை கிடைக்கவில்லை என்ற நிலையையும் மாற்றுகின்ற நிலை அமைந்துள்ளது. இவ்வாறு உருவாகக் கூடிய தொழில்களுக்கு ஏற்ற வல்லுநர்களை உருவாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதனை மனதில் வைத்துதான் நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நமது இளைஞர்களை தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு உருவாக்குதல், அதன்மூலம் அவர்களது திறனுக்கு ஏற்ற வேலையை கிடைக்கச் செய்தலே இந்த அரசின் முக்கிய குறிக்கோளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இளைஞர்களை ஊக்கப்படுத்துக்கூடிய வகையில் 'நான் முதல்வன்' திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

12-ம் வகுப்பு படித்த பெரும்பாலனவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளை நோக்கி ஓடி வந்துகொண்டுள்ளனர். வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கக்கூடிய பிற துறை படிப்புகளையும் அவர்கள் உணர்ந்திருந்தால், இதுபோல நிச்சயமாக நடக்காது.

பல்வேறு துறை சார் படிப்புகளை பற்றியும் மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது பெற்றோர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை பிள்ளைகளுக்கு சொல்லலாம், வழிகாட்டலாம், தவறு கிடையாது. ஆனால், திணிக்கக்கூடாது. அப்பா, அம்மாவின் ஆசைகளுக்காக பல படிப்புகளில் சேர்கின்ற பிள்ளைகள் பின்னர் மனதளவில் சோர்வடைகின்றனர். அவர்களால் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கேட்டு அதில் படிக்க வையுங்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x