Published : 29 Aug 2022 06:45 AM
Last Updated : 29 Aug 2022 06:45 AM
திருவண்ணாமலை/கோவில்பட்டி: செங்கம் மற்றும் தூத்துக்குடி அருகே நேற்று நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த சின்னபையன்(65), இவரது மனைவி அரவஞ்சி(60), மகன் பழனி(39), தம்பி தங்கவேல்(50), உறவினர் மகாலிங்கம்(52) ஆகியோர் திருக்கோவிலூரில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை பழனி ஓட்டினார்.
செங்கம் அருகே புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆனந்தவாடி கிராமத்தில் சென்றபோது, கார் மீது ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பால் டேங்கர் லாரி மோதியது. லாரி ஓட்டுநர் தப்பிவிட்டார்.
விபத்தில் சின்னபையன், அரவஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், தங்கவேல், மகாலிங்கம் ஆகியோர், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து மேல்செங்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (71). இவரது மனைவி சங்கரேஸ்வரி (67). இவர்களது மகன்கள் கனக தர்மராஜ் (39), சங்கர் (38), ராமர் (33), மகள் பிரபா. இந்நிலையில், பழனிசாமி நேற்று காலை குடும்பத்துடன் காரில் திருச்செந்தூர் புறப்பட்டார். காரை சங்கர் ஓட்டினார்.
தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலை பகுதியில் வந்தபோது பின்பக்க டயர் வெடித்து தடுமாறிய கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் சங்கரேஸ்வரி, சாத்தூரைச் சேர்ந்த மருதாயி(55) உயிரிழந்தனர். 3 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சங்கர் இறந்தார். ஓட்டப்பிடாரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT