

மின்தடை பற்றி புகார் தெரிவிக்க வழங்கப் பட்டுள்ள புதிய எண்ணில் (044 - 1912) தொடர்பு கொள்ள முடியாமல் ஏர்டெல் செல்போன் நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எப்போது மின்சாரம் வரும், போகும் என்றே தெரியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். அதனால், மின் தடை குறித்த புகார்களும் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் 16-ம் தேதி வரை மின்தடை பற்றி 155333 என்ற எண்ணில் மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த எண்ணுக்குப் பதிலாக 1912 என்ற புதிய எண்ணை பயன்படுத்துமாறு தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. மறுநாளில் இருந்து 1912 என்ற எண் செயல்படத் தொடங்கியது.
புதிய எண்ணை பி.எஸ்.என்எல். நிறுவனம் வழங்கியுள்ளது இதனால் மற்ற செல்போன் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்தக் கட்டண சேவையைப் பெற்று தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஏர்டெல் நிறுவனம் தவிர அனைத்து செல்போன் நிறுவனங்களும் மின்தடை புகாருக்கான புதிய எண் சேவையை வழங்கி வருகின்றன.
ஆனால், ஏர்டெல் செல்போன் வைத்திருக் கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், மின் தடை குறித்து புகார் கூற முடி யாமல் சிரமப்படுகின்றனர். 1912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அது உபயோகத்தில் இல்லை என பதில் வருகிறது. வேறுவழியில்லாமல், மற்றவர் களிடம் வேறு நிறுவன செல்போனை வாங்கி புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க 1912 என்ற புதிய எண், கடந்த மாதம் 17-ம் தேதி முதல் பயன் பாட்டில் உள்ளது. தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். தரைவழித் தொலை பேசியைத் தவிர மற்ற செல்போன் நிறுவனங் களின் செல்போன் மற்றும் தரைவழித் தொலைபேசியில் எஸ்.டி.டி.கோடுடன் இந்த எண்ணை டயல் செய்தால் மின் தடை நீக்க மையத்தைத் தொடர்பு கொள்ள லாம். தமிழகத்தில் உள்ள செல்போன் நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல். நிறுவனத் துடன் தொடர்பு கொண்டு இப்புதிய எண் சேவையைத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், ஏர்டெல் நிறுவனம் மட்டும் இச்சேவையைத் தொடங்க வில்லை. பொது சேவைக்கான எண் என்பதால், மேற்கண்ட தனியார் சர்வீஸ் புரவைடருக்கும் புதிய எண் சேவையை விரைவில் வழங்க வேண்டும் என சென்னை கெல்லீஸில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளரிடம் தமிழ்நாடு மின்துறை கேட்டுக் கொண்டுள்ளது. விரை வில் ஏர்டெல்லிலும் புதிய எண் சேவை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் 1912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அது உபயோகத்தில் இல்லை என பதில் வருகிறது.