Published : 27 Oct 2016 08:28 AM
Last Updated : 27 Oct 2016 08:28 AM

குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு கால நிர்ணயம் ஏதும் இல்லை: உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு கால நிர்ணயம் ஏதும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். ஆதார் அட்டையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகள் சார்பில் 34 ஆயிரத்து 686 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள், 10 லட்சத்து 79 ஆயிரத்து 387 சர்க்கரை விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள், 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. அதன்பின் தற்போது வரை உள்தாள் ஒட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்குப் பதில், புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த ஆண்டுடன் உள்தாள் முடிவதால், புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக நியாயவிலைக்கடை களுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வழங்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் பொது விநியோகத்திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் நிலையில், தமிழகத்தில் இப்பணிகளை அக்டோபர் இறுதிக்குள் முடிக்க கடை பணியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களே, ஆதார் இணைப்பை முடித்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் ஆதார் எண்ணை வழங்காத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உணவுத்துறை இதை மறுத்துள்ளது.

சென்னை லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ்ஹவுஸ் பகுதிகளிலுள்ள அமுதம் மற்றம் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், இது தொடர்பாக நிருபர்களிடம் கூறும்போது, “ஆதார் அட்டை பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. ஆதார் எண் இணைப்புக்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை’’ என்றார்.

இதையடுத்து, பொருட்கள் விநியோ கம் தொடர்பான குழப்பத்துக்கு விடை கிடைத்தது. இருப்பினும், ஆதார் விவ ரங்களை விரைவாக வழங்கினால்தான், மின்னணு அட்டை தயாரிப்பை எளிமையாக முடிக்க முடியும் என உணவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் ஆதார் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்குள்ளவர்கள் வசதிக்காகத்தான் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதையும் யாரும் பயன்படுத்துவதில்லை. கடையில் வந்து கார்டை வழங்கினால், உடனடியாக பதிவுசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டம் அறிந்தவர்களே தற்போது ஆதார் பதிவு செய்ய வேண்டும் என ஏதேனும் விதி இருக்கிறதா? என கேள்வி கேட்கின்றனர். சமையல் கேஸ் விநியோகத்துக்கு ஆதார் கட்டாயம் என்றதும் உடனடியாக கொடுக்கும் மக்கள், புதிய தொழில்நுட்பத்துக்கு தகவல்களை அளிப்பதில் தாமதம் செய்வது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஆதார் இணைப்பால் போலிகள் களையப்படும். இதன் மூலம் பொருட்கள் விநியோகமும் சீரடையும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x