Last Updated : 13 Oct, 2016 01:38 PM

 

Published : 13 Oct 2016 01:38 PM
Last Updated : 13 Oct 2016 01:38 PM

வாட்ஸ் அப் உபயோகத்தால் மாணவர் சிந்தனை திறன் பாதிப்பு: பேராசிரியர் ஆய்வில் தகவல்

‘வாட்ஸ் அப்’ உபயோகத்தால் மாணவர், இளைஞர்களின் சிந்தனைத் திறன் பாதிப்புக்குள்ளாவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் பெரி. கபிலன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கபிலன் மேலும் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் கோம், பிரையன் ஆக்டன் ஆகிய இருவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர்களை முகநூல் (பேஸ்புக்) நிறுவனம் வேலைக்குச் சேர்க்காத விரக்தியில், 2009-ம் ஆண்டில் ‘வாட்ஸ் அப்’ செயலி நிறுவனத்தைத் தொடங்கினர்.

‘வாட்ஸ் அப்’ அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘சொந்த தகவலை வெளியிடுதல், பதினாறு வயதுக்குள் யாரும் பயன்படுத்தக் கூடாது, மீறினால் ‘வாட்ஸ் அப்’ குழுவில் இருந்து நீக்கலாம் என நிறுவன விதிமுறை இருந்தாலும், அது தடுக்கப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. உலகில் 80 கோடி பேர் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் புதிதாக ஒரு லட்சம் பேர் வாட்ஸ் அப் குரூப்பில் இணைகின்றனர்

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவோரில் முதல் மூன்று இடத்தில் இந்தியா இருக்கிறது.

மதுரையில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில், கிராமம், நகர் பகுதியில் 100 பேரை ஆய்வு செய்ததில், 60 சதவீதம் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவது தெரியவந்தது.

இளைஞர்கள், மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’பிற்கு அடிமையாகும் சூழலால் சுய சிந்தனை பாதிக்கிறது. இளைஞர்களிடத்தில் இது போதை போல மாறிவிட்டது.

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தும் 500 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நிலை பற்றிய ஆய்வில், கல்வி, பொதுத்தகவல், அரட்டை, குடும்பம் போன்ற சில நியாயமான காரணங்களுக்காக பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அதிகம் அரட்டை அடிக்க, பயன்படுத்துகின்றனர்.

பகுப்பாய்வில், கல்வி 8 சதவீதமும் பொது தகவலுக்கு 11 சதவீதமும், அரட்டைக்கு 72 சதவீதமும், குடும்பம் தகவலுக்கென 9 சதவீதமும் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துகின்றனர். அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் ஆய்வில் தெரிகிறது.

தடையின்றி சிலர் அனுப்பும் தகவல்களை விருப்பமின்றி பார்க்க, கேட்க வேண்டிய சூழல் குரூப்பில் இருப்போருக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக ‘வாட்ஸ்அப்’ செயலியால் மாணவ சமுதாயம் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகி வருவது தெரிகிறது என்பதுதான் உண்மை. இதனைத் தடுக்க, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் வாட்ஸ் அப் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆரோக்கியம் அவசியம். வணிக நோக்கமற்ற தொழில்நுட்பமே தேவை என்பதை சமூக வலைதள நிறுவனங்களும் உணரவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x