Published : 18 Oct 2016 10:01 AM
Last Updated : 18 Oct 2016 10:01 AM

பூ துளைப்பான் பூச்சிகளால் மதுரை குண்டுமல்லிக்கு ஆபத்து: மத்திய அரசின் புவிசார் குறியீடு ரத்தாகும் அபாயம்

உலகளவில் பிரசித்தி பெற்ற மதுரை குண்டு மல்லிப் பூக்கள், கடந்த 2 மாதங்களாக ‘பூ துளைப்பான்’ என்ற ஒருவகை பூச்சிகளால் பூக்கள் குங்கும நிறத்தில் மாறி அழிகின்றன. இதனால், மதுரை மல்லிப்பூக்களுடன் மற்ற ஊர் மல்லிப் பூக்களைக் கலப்படம் செய்து விற்கப்படுவதால் ‘புவிசார் குறியீடு’ ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக 80 ஆயிரம் ஏக்கரில் மல்லிப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், மதுரை மாவட்டத்தின் தட்பவெப்ப நிலை, மண் வளம், மழையளவு, இயற்கையாகவே அமைந்த பூ மணம், தரம் உள்ளிட் டவற்றால் மதுரை குண்டு மல்லி உலகளவில் பிரசித்தி பெற்றது.

மற்ற ஊர்களில் விளையும் பூக்களை ஒருநாள் மட்டுமே வைக்க முடியும். மதுரை மல்லிப்பூ கூடுதல் ஒருநாள் வாடாமல் இருக்கும். பால் வெள்ளை நிறத்தில் முத்து முத்தாக மதுரை மல்லி பார்க்க அழகாகவும், கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும். அதனால், மத்திய அரசு மதுரை குண்டுமல்லிப் பூக்களுக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கி அங்கீகரித்துள்ளது. அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, அவனியா புரம், கள்ளந்திரி, தொப்புளான்பட்டி உட்பட மதுரை மாவட்டம் முழு வதும் 25,000 ஏக்கரில் மல்லிப்பூ சாகுபடியாகிறது. அதனால், தமிழகத்தில் விளையும் மல்லிகைப் பூவில் 35 சதவீதம் மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. மதுரை மல்லிப் பூவானது குவைத், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் தினமும் ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மதுரை மல்லிப்பூ தற்போது ‘பூ துளைப்பான்’ என்ற ஒருவகை பூச்சிகளால் அழிந்து வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் மல்லிப்பூ அழிந்துவிட்டதால் சந்தைகளுக்கு அவற்றின் வரத்து குறைந்தது. அதனால், வியாபாரிகள் மதுரை மல்லிப்பூக்களுடன் பிற மாவட்ட மல்லிப் பூக்களைச் சேர்த்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து இந்த தவறுகள் நீடித்தால் மத்திய அரசு தாமாகவே முன்வந்து மதுரை மல்லிக்கான புவிசார் குறியீட்டை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் துறை வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குண்டுமல்லிப் பூக்களை குங்கும நிறத்துக்கு மாற்றும் பூச்சி. | அடுத்தப்படம்: குங்கும நிறத்துக்கு மாறிய மல்லிப் பூக்கள்.

இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பாகவும், தரமாகவும் விளையும் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களை அங்கீகரிக்கவே மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. கலப்பட சட்டத்தின் கீழும், புவிசார் குறியீடு விதிமுறைகள் அடிப்படையிலும் மதுரை மல்லிப்பூ விற்பனையில் கலப்படம் நடப்பது சட்டப்படி தவறு. அப்படி நடந்தால் ரத்தாக வாய்ப்புள்ளது என்றார்.

மதுரை மல்லியை காப்பாற்ற என்ன செய்யலாம்?

மல்லிப்பூக்களை அழிக்கும் ‘பூ துளைப்பான்’ பூச்சி ஒவ்வொரு பூவிலும் சென்று 300 முட்டைகளை இடுகின்றன. அந்த முட்டைகளில் இருந்து வெளியேறும் புழுக்கள் பூக்களில் இருக்கும் சத்துகளை உறிஞ்சிவிட்டு தன்னுடைய கழிவுப்பொருட்களை அந்த பூக்களில் விட்டுச் செல்கின்றன. இதனால், பால் நிறத்தில் இருக்கும் குண்டு மல்லிப்பூ குங்கும நிறத்துக்கு மாறுகிறது. மணமும் மாறுகிறது. இதனால், ஒரு கிலோ மதுரை மல்லி பறிக்கும் இடத்தில் 100 கிராம் பூக்கள் வீணாகின்றன. சந்தைகளிலும் வரவேற்பு குறைகிறது. விவசாயிகள் உதிர்ந்து கிடக்கும் பூச்சிகள் தாக்கிய பூக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 30 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல், தயோ குளோபிரீட் பூச்சிக்கொல்லி மருந்தையும் அடிக்கலாம். பாக்டிரியா பூச்சிக்கொல்லி மருந்தை 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அடிக்கலாம் என்று பேராசிரியர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x