Published : 14 Aug 2022 11:26 AM
Last Updated : 14 Aug 2022 11:26 AM

'திமுக அரசு பதவியேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது' - இபிஎஸ்

சென்னை: " இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்ளும், நிர்வாகத் திறமை இல்லாத இந்த விடியா அரசின் முதல்வர் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகள், கொள்ளையர்களை காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்த; பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மெட்ரோ நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடத்திலும், மாநில அளவில் தமிழகம் முதலிடத்தையும் பெற்ற தமிழகக் காவல் துறை இன்று கட்டுண்டு,சுதந்திரமாகச் செயல்பட வழியின்றி ஆளும் விடியா திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

விடியா அரசின் ஆட்சியாளர்களுடைய கண் அசைவுக்கு மட்டுமே வேலை செய்யும் இந்தக் காவல் துறை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளாததால் நாள்தோறும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருதைக் கண்டு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர் என்று, ஏற்கெனவே நான் எனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

இந்த விடியா திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும் தொடர்ந்து கூறி வந்தேன். மேலும், காவல் துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்தி வந்தேன். ஆனால், தொடர்ந்து காவல் துறையை சட்டப்படி நடக்க அனுமதிக்காமல், தங்களின் ஏவல் துறையாகவே இந்த விடியா அரசு பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், 13.8.2022 அன்று பகல் சுமார் 2.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உள்ளே நுழைந்து, காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வங்கியினுள் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 14 மாத கால விடியா ஆட்சியில் ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள், ஒருசில காவல் துறையினர் கூட்டு சேர்ந்து பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. திமுக அரசின்
காவல் துறையில் இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்ளும், நிர்வாகத் திறமை இல்லாத இந்த விடியா அரசின் முதல்வர் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையர்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.

எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசின் முதல்வர், தமிழகக் காவல் துறையினை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x