Published : 14 Aug 2022 09:00 AM
Last Updated : 14 Aug 2022 09:00 AM

1 லட்சம் வழக்குகள், ரூ.1.07 கோடி அபராதம் வசூல்: பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

‘பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா போக்குவரத்து துறை?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

சட்ட விதிகளுக்கு புறம்பாகபதிவெண் பலகைகளை பொருத்தியுள்ள வாகனங்கள் மற்றும் மடிக்கும் வகையிலான பதிவெண் பலகைகளை பொருத்தியுள்ள வாகனங்களுக்கு எதிராக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு தணிக்கைகள் செய்து தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

பதிவெண் பலகைகளின் விதிமீறல்கள் தொடர்பாக தினந்தோறும் சுமார் 200 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை சட்ட விதிகளுக்கு புறம்பாக பதிவெண் பலகைகள் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பு சோதனைகள் மூலம்,1 லட்சத்து 7 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்து, ரூ.1,07,78,100 அபராதம் வசூலித்துள்ளனர். இது போன்ற சிறப்பு தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x