Published : 13 Aug 2022 01:05 PM
Last Updated : 13 Aug 2022 01:05 PM

இபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: போலி விவசாயி இபிஎஸ் விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை யாரும் நம்பப்போவது இல்லை என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி யூரியா உரத்துடன் இணை பொருட்கள் சேர்த்து விற்கப்படுவதாகவும் கூட்டுறவு நிறுவனங்களில் நானோ கட்டாயப்படுத்தி விற்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் மேலும் யூரியா தோட்டக்கலை பயிர்களுக்கு கலப்புரங்கள் கூடுதல் விலையில் விற்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் அதிகமாக அவதிப்படுவதாக முற்றிலும் தவறான தகவல்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் தரும் அறிக்கையை யாரும் நம்பப் போவதில்லை இருந்தாலும் மக்களுக்கு அரசின் சார்பாக சரியான தகவலை தெரிவிக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு உள்ளது.

10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் குட்டி சுவராக்கிய அதிமுகவின் கல்லாபெட்டி சிங்காரம் எடப்பாடி திமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை தற்போது குறை சொல்கிறார். அவரது அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நாள் தோறும் வீதியில் இறங்கி போராடிய சூழல் நிலவியதை எல்லோரும் பார்த்தோம்.

ஆனால், விவசாயிகளின் தோழனாக விளங்கும் திமுக ஆட்சிக்குவந்த, ஓராண்டு காலத்திலேயே மேற்கொண்ட பல்வேறு நல்ல முன்னெடுப்புகளால் முன்பு எப்போதும் இல்லாத சாதனையாக 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் 5,27,000 ஏக்கர் பரப்பளவில் டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இன்று விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அதிமுக அரசு விவசாயிகளின் விரோத அதிமுக அரசு, தனது பத்தாண்டு காலத்தில் சுமார் 2 இலட்சம் மின் இணைப்புகள் மட்டும்தான் வழங்கியது. ஆனால் நம் மாநிலத்தில் விவசாய உற்பத்தியினை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் நலனை காக்கும் வகையிலும் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகளை அறிவித்த நான்கு மாத காலத்திலேயே வழங்கி சாதனை புரிந்தது திமுக அரசு.

குறுவை பயிரிடும் பரப்பு அதிமுக ஆட்சியில் 2019ல் 3,43,093 ஏக்கரும் 2020ல் 4,78,105 ஏக்கரும் தான் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 5,27,000 ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி பரப்பு அதிகமானது 46 ஆண்டு கால வரலாற்று சாதனை ஆகும். இச்சாதனைக்கு கழக அரசுதான் காரணம் ஆகும். கழக அரசு மேற்கொண்ட வேளாண் நடவடிக்கைகளில் முக்கியமான காரணமாகும்.

தமிழக முதல்வர் தலைமையில் அன்றாடம் கண்ணும் கருத்துமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இந்த ஆட்சியை விடியலை நோக்கி கொண்டு செல்கின்றது. இது பொருக்காமல் கண்ணை மூடிக்கொண்டு வெற்று அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றத்துடிக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் தான்.

விவசாயிகளிடம் நேரடியாக சென்று அவர்களுடைய இடத்தில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், ஆலோசனைகள் வழங்குவதும் இவ்வரசு பொற்றப்பேற்றவுடன்தான் நடைபெறுகிறது. வேளாண் துறை என ஒன்று இருப்பதை வேளாண் பெருங்குடி மக்கள் உணர்வதே இவ்வாட்சியில் தான். கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக 1997 கிராமங்களில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கே கிடைத்திட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழக அரசு விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

ஒன்றிய அரசு “நானோ யூரியா” பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதின் அடிப்படையில் இப்கோ கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் நானோ யூரியா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நானோ யூரியா பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளை தமிழக அரசு எப்போதும் நிர்பந்திக்கவோ கட்டாயப்படுத்தவோ இல்லை.

உரத்தின் விலையானது ஒன்றிய அரசால் மட்டுமே இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. நான்கு வருடம் முதலமைச்சராக இருந்த போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக சீர்கெட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வர கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், நெல்தரிசில் பயறு வகைகள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம், தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் மற்றும் e-NAM, டெல்டா மாவட்டங்களில் உலர்களங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களை காவல் துறை மூலம் விவசாயிகளை அடக்கி புறந்தள்ளி ஆட்சி நடத்தியவர்தான் கல்லாப் பெட்டி சிங்காரம் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாக அறிக்கை விடும் போலி விவசாயி, விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை யாரும் நம்பப்போவது இல்லை.

இத்தகைய உண்மைக்குப் புறம்பான அறிக்கையினை வெளியிடுவதனை இனிவரும் காலங்களிலாவது தவிர்த்து பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக இனியாவது நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். " இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x