Published : 13 Aug 2022 12:18 PM
Last Updated : 13 Aug 2022 12:18 PM

தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப் பொருட்களை ஒழிப்பது எப்படி?- அன்புமணி ராமதாஸ்

சென்னை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப் பொருட்களை ஒழிப்பது எப்படி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 96.18% வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் எந்த தண்டனையுமின்றி தப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

போதைப் பொருட்களை கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் தண்டிக்கப்படாமல், போதைப் பொருட்களை ஒழிக்க முயல்வது பயனற்ற, வீண் செயலாகவே அமையும்.

சென்னையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த 10 ஆம் தேதி வரையிலான இரு ஆண்டுகளில், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 102 வழக்குகளில் அதற்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அவற்றில் 4 வழக்குகளில் மட்டும் தான் மொத்தம் 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 98 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 200&க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது மிகவும் மோசமான, வேதனையளிக்கும் முன்னுதாரணமாகும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாக போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அவற்றை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வந்ததன் பயனாக தமிழக அரசும் இப்போது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், போதைப்பொருட்கள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் மூல காரணமாக இருப்பவர்களை தண்டிக்காமல், போதைப்பொருட்களை எவ்வாறு ஒழிக்க முடியும்? என்ற வினாவை தமிழக அரசு, தனக்குள்ளாக எழுப்பி விடை காண வேண்டும்.

போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டால், அதே இடத்தில் நாளை இன்னொருவர் போதைப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்குகிறார்.

கைது செய்யப்படுபவர்கள் 15 நாட்களில் பிணையில் வந்து விடுகின்றனர். போதைப் பொருட்களை விற்றால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் போதைப் பொருட்களை ஒழிக்க முடியாது என்று பாமக தொடர்ந்து கூறி வருகிறது.

அதை உறுதி செய்யும் வகையில் தான், 96% போதைப் பொருட்கள் வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரம் அமைந்துள்ளது.

போதைப் பொருட்களை கடத்தியவர்களும், விற்றவர்களும் விடுதலையாகிவிட்டனர் என்பதை விட அதிர்ச்சியளிக்கும் விஷயம், இதற்கு காவல்துறையினரே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தான். பல வழக்குகளில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினரே பிறழ்சாட்சியம் அளித்துள்ளனர்.

பல வழக்குகளில் போதைப் பொருட்களின் ஆய்வு முடிவுகள் தவறாக வருவதற்கும், அவற்றின் அடிப்படையில் சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் காவல்துறையினர் துணை போயிருக்கின்றனர். இதற்கு காரணமானவர்களை சிறப்பு நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

தமிழகத்தின் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக அரசு முதன்மையாக நம்பியிருப்பது காவல்துறை அதிகாரிகளைத் தான். ஆனால், காவல்துறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசின் பக்கம் நிற்காமல் போதைக் கடத்தல்காரர்களின் பக்கம் இருந்தால் போதையை எவ்வாறு ஒழிக்க முடியும்? காவல்துறையில் தலைகீழான மாற்றங்களைச் செய்து, பொறுப்பான இடங்களில் பொறுப்பான அதிகாரிகளை நியமனம் செய்தால் மட்டும் தான் போதைப்பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற முடியும்.

போதைப்பொருட்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், குற்றவாளிகள் தப்புவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தல், திறமையான, நேர்மையான அதிகாரிகளை போதைப் பொருள் ஒழிப்பு பணிகளில் அமர்த்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் போதைப் பொருட்களை ஒழிக்க முடியும்.

எனவே, போதைப்பொருள் ஒழிப்புப் பணி மற்றும் குற்றமிழைத்தவர்களை தண்டிக்கும் நடைமுறையில் உள்ள ஓட்டைகளைக் களைந்து, பொறுப்பானவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து போதைப் பொருட்களை ஒழிப்பை விரைவுபடுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x