Published : 11 Aug 2022 04:08 PM
Last Updated : 11 Aug 2022 04:08 PM

“மின் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” - அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் உறுதிமொழி ஏற்கிறார் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. அருகில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட  வருவாய் அலுவலர் ம.லியாகத் உள்ளிட்டோர்.

கரூர்: “மின் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் இன்று (ஆக. 11) ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: "தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருட்கள் இல்லாத அளவிற்கு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் பணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக, போதைப் பொருட்களுக்கு ஆளாகாத மாநிலமாக தமிழகத்தை முதல்வர் மாற்றிக் காட்டுவார்.

மின் திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையாக மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அழுத்தம் காரணமாகவே நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மின் திருத்த மசோதா அனுப்பப்பட்டு இருக்கின்றது. மின்சார சட்ட மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வீடுகளுக்கு வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசைகளுக்கான விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் எனு அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாக்கப்படுகின்றன.

மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடிய நுகர்வோர்கள், தொழிற்சாலைகள் பகுதிகளிலே அவர்கள் கவனம் இருக்கும். ஏழைகள் மீது கவனம் கொள்ளமாட்டார்கள். ஒட்டு மொத்தமாக அரசினுடைய கட்டமைப்பு, மின்வாரியத்தினுடைய கட்டமைப்பு நாம் உருவாக்குகின்ற கட்டமைப்பை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடிய அந்த சூழல்தான் மின் சட்ட மசோதாவிற்கு இடம் பெற்றுள்ளன. மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்.

காவிரி, அமரவதி ஆற்று உபரி நீரை பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தாதம்பாளையம் ஏரியை தூர் வார ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டு வனத்துறை அனுமதிகள் பெற்றவுடன் தூர்வாரும் பணிகள் நடைபெற இருக்கின்றன. வெள்ளியணை மற்றும் பஞ்சப்பட்டி ஏரிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஏரிகளிலும் காவிரி மற்றும் அமராவதி உபரி நீர்களை பயன்படுத்தக்கூடிய ஏரிகளுக்கான முதல் கட்ட பணிகள் ஆய்வு செய்யக் கூடிய பணிகளுக்கு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அதற்குரிய நிதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பொழுது ஆய்வு செய்யப்படக்கூடிய பணிகள் தொடங்கி இருக்கின்றன" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இந்நிகழ்வில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் கீதா, துணைமேயர் ப.சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் ரூபினா, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x