Published : 11 Aug 2022 04:26 AM
Last Updated : 11 Aug 2022 04:26 AM

செஸ் ஒலிம்பியாட் | பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி சிறப்புப் பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற பொதுப் பிரிவில் இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது முதல்வருடன் வீரர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அருகில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, விளையாட்டுத் துறை செயலர் அபூர்வா, செஸ் போட்டியின் சிறப்புப் பணி அலுவலர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் கே.பி.கார்த்திகேயன் ஆகியோர்.

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற பொதுப் பிரிவில் இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.

இதையடுத்து, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மாலை கோலாகலமாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகமே பாராட்டும் வகையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் இந்திய பி அணி, பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணி என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி பொதுப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஏ அணிக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கி தமிழக அரசு சிறப்பிக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வரை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற பெண்கள் ஏ அணி மற்றும் ஆண்கள் பி அணி வீரர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இரு அணிகளுக்கும் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையான தலா ரூ.1 கோடிக்கான காசோலைகளை அவர் களிடம் முதல்வர் வழங்கி பாராட்டினார்.

பிரதமர் மோடி பாராட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x