Published : 11 Aug 2022 04:15 AM
Last Updated : 11 Aug 2022 04:15 AM
சேலத்தில் விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி உற்ஸவம் வரும் 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது, வீடுகள், கோயில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை தயாரிப்பதில், தமிழகம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் கூறியதாவது:
கரோனா தொற்று அதிகரித்திருந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உற்ஸவம் கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் தேவைப்படாத நிலை இருந்தது. உற்பத்தி செய்த சிலைகளைக் கூட விற்பனை செய்ய முடியாமல் தவித்தோம். தற்போது, கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனினும், ஆர்டரின் பேரில் மட்டுமே பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். விற்பனைக்காக, அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். சுண்ணாம்பு மாவு, தேங்காய் நார், இயற்கை வர்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அச்சில் வார்த்து, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம்.
விஷ்ணு விநாயகர், மச்ச ஆசன விநாயகர், கருட வாகன விநாயகர் என விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறோம். பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT