

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயா கட்டியிருந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்படாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், வீட்டை அகற்ற வருவாய்த் துறை முடிவு செய்த நிலையில், அருணோதயா குடும்பத்தினரே நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றும் பணியை தொடங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே தொழுதாவூரில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைக்குட்டை என்ற நீர்நிலை உள்ளது. இதனை ஆக்கிரமித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த, பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயா, திமுகவைச் சேர்ந்த தொழுதாவூர் ஊராட்சித் தலைவர் அருள்முருகன் உட்பட 7 பேர் வீடுகள், கடை என 9 கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
அதனை அகற்றக்கோரி கடந்த 2020-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் தொடர்புடையவர்களுக்கு 2 முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசிடம் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 5-ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பால் குட்டை நிலத்தில் கட்டப்பட்டிருந்த நியாயவிலைக் கடை, இ- சேவை கட்டிடம், நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களும் அகற்றப்பட்டன.
அதேநேரம் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயாவின் 2 வீடுகளில் ஒரு வீடு மட்டுமே அகற்றப்பட்டது. மற்றொரு வீட்டையும் அகற்றக்கோரி ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இருட்டாக இருப்பதால் மறுநாள் அகற்றுவதாக உறுதியளித்தனர்.
ஆனால், உறுதியளித்தபடி அருணோதயா தற்போது வசிக்கும் புதிய கான்கிரீட் வீட்டை அகற்றாதது கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இரு தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக புறப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா, தற்போது அருணோதயா வசிக்கும் புதிய வீட்டுக்கு கடந்த 2002-ம் ஆண்டு வருவாய் துறையினரால் பட்டா வழங்கப்பட்டுள்ளதால், அதனை ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், வெள்ளை குட்டை நீர்நிலைக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், அது ரத்து செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக நேற்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அருணோதயா குடும்பத்தினரே, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று மதியம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தங்கள் வீட்டை அகற்றும் பணியை தொடங்கினர். இதில், வீட்டின் ஜன்னல், கதவுகள் உட்பட வீட்டின் முன்பகுதி மட்டுமே நேற்று இரவு வரை அகற்றப்பட்டன.