Published : 20 Oct 2016 12:59 PM
Last Updated : 20 Oct 2016 12:59 PM

ஏ.கே. போஸுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?- திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் தேர்வில் திருப்பம்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவ. 19-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, எஸ்.எம். சீனிவேலு மகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ், மண்டலத் தலைவர் சாலைமுத்து, வழக்கறிஞர் ரமேஷ், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோரில் யாராவது ஒருவருக்கு இந்த தொ குதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக் கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், கட்சியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஏ.கே. போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏ.கே.போஸ் 2006-ல் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர். 2011 தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். ஆனால், உடல் நலக் குறைவால் அவருக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அதனால், கட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார்.

இதனால் விரக்தியடைந்திருந்த ஏ.கே.போஸ் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன் முதல்வரை சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் முக்கியப் பதவியில் இல்லாததால் கட்சிக்காரர்கள் தன்னை மதிப்பதில்லை. எனவே மேயர் வாய்ப்பு தரும்படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது ஜெயலலிதா திருப்பரங் குன்றத்தில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி அனுப்பியுள்ளார்.

ஆனால், அதன்பின் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதால், தனக்கு சீட் கிடைக்காது என போஸ் நினைத்துள்ளார்.

ஆனால், ஜெயலலிதா முன்பே திருப்பரங்குன்றம் வேட் பாளரை முடிவு செய்ததால் போஸுக்கு சீட் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பழைய கட்சிக்காரரான ஏ.கே.போஸ் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் வருத்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரைக்கே சீட் கிடைக்க வாய்ப்பு அதிகம் என கட்சியினரிடம் பேச்சு இருந்தது.

அதை எதிர்பார்த்தே அவரும் மாநகராட்சி கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு சீட் கேட்கவில்லை. கட்சியினரும் அவர்தான் வேட்பாளராவார் என உறுதியாக நம்பினர்.

ஆனால், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், டேவிட் அண்ணாதுரையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. டேவிட் அண்ணாதுரைக்கு மேடை பேச்சு திறமையும், கட்சியினரையும், மேலிடத் தலைவர்களையும் ஈர்க்கும் திறமையும் உண்டு.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கட்சியினர் தேர்தல் பணியை சரியாக செய்யாததால் இழுபறியான வெற்றி கிடைத்துள்ளதாக கோபப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவை சமாதானப்படுத்த தெரியாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தடுமாறிய நிலையில் டேவிட் அண்ணாதுரை எழுந்து உருக்கமாகப் பேசி ஜெய லலிதாவின் பாராட்டை பெற்றார். அப்போது முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் திறமை அவரது மகனுக்கும் இருப்பதாக கட்சியினர் வியந்து குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, டேவிட் அண்ணாதுரைக்கு சீட் கிடைத்தால் கட்சியில் தங்களுக்கு போட்டியாக அதிகார மையத்துக்கு வந்து விடுவாரோ என்ற அச்சத்தில் உள்ளூர் அமைச்சர்கள், முக்கிய மாவட்ட நிர்வாகி ஒருவர், அவருக்கு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சீட் கிடைப்பதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. டேவிட் அண்ணாதுரைக்கு அடுத்து, 2-வது வாய்ப்பாக அதிமுகவில் மறைந்த எஸ்.எம்.சீனிவேலு மகனுக்கு சீட் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன் சீனிவேலு மகனை மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சென்னைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், யாரை வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தல் பணியில் ஒத்துழைக்க அறிவுறுத்தியதாக தற் போது தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினரும் வருத்தம டைந்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x