Published : 03 Aug 2022 05:58 AM
Last Updated : 03 Aug 2022 05:58 AM

போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க சென்னையில் 'சூப்பர் குட்டி போலீஸ்' திட்டம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

போக்குவரத்து விதிமீறல் குறித்து மாணவர்கள் கண்காணிக்கும் வகையில் யங் இந்தியன் (சென்னை) அமைப்புடன் சென்னை காவல் துறை இணைந்து முன்னெடுக்கும் 'சூப்பர் குட்டி போலீஸ்' திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். உடன், கூடுதல் போக்குவரத்து காவல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் (தெற்கு) எஸ்.ராஜேந்திரன், தலைமை போக்குவரத்து வார்டன் ஹரிஷ் எல்.மேத்தா, யங் இந்தியன் (சென்னை) அமைப்பின் தலைவர் கே.நிதின், துணைத் தலைவர் சி.பிரதீப் குமார் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: போக்குவரத்து விதிமீறல் குறித்து மாணவர்கள் கண்காணிக்கும் வகையில் யங் இந்தியன் (சென்னை) அமைப் புடன் சென்னை காவல் துறை இணைந்து முன்னெடுக்கும் ‘சூப்பர் குட்டி போலீஸ்' திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றுதொடங்கி வைத்தார்.

சென்னை, செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நிகழாண்டுக்கான சாலைபாதுகாப்பு ரோந்துப் பிரிவு (ஆர்எஸ்பி)மற்றும் சூப்பர் குட்டி போலீஸ் ஆகிய திட்டங்களை, காவல் ஆணையர் சங்கர்ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: வழக்கமாக 7 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்குதான் சாலைப் பாதுகாப்பு ரோந்துப் பிரிவில் பயிற்சி அளிக்கப்படும். இந்தமுறை 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான சுமார் ஒரு லட்சம் மாணவர்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்துகளைப் பெற உள்ளோம்.

மாணவர்களின் பயணத்தின்போது போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுகிறதா என அவர்களுக்கு வழங்கப்பட்ட சூப்பர் குட்டி போலீஸ் அட்டையில் டிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு 12 கேள்விகளுக்கு, 12 முறை பயணத்தின்போது கிடைக்கும் கருத்துகளைக் கொண்டு, சாலைப்பாதுகாப்பு கல்வி மற்றும் அமலாக்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் செயல்படுத்துவோம். இந்த கருத்துகள் உண்மையாகவும், நடுநிலையாகவும் இருக்கும்.

இதேபோல் அரசின் உதவியுடன், 50 மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கு காவல் துறையின் செயல் பாடுகள்குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. பிரதமரே இங்கு பிரச்சினையின்றி வந்து சென்றுள்ளார். எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லை.

அலுவலக நேரத்தில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரு வழிப்பாதையை அதிகரித்துள்ளோம். இதனால் பெரும்பாலான இடத்தில் நெரிசல் குறைந்துள்ளது. பலனளிக்காத சில இடங்களில் ஒரு வழிப்பாதையை மீண்டும் பழையபடி மாற்றியுள்ளோம்.

இதற்கான ஒரு செயலியை வடிவமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நெரிசல் ஏற்படும் இட விவரத்தை கூகுள் மேப்பிடமிருந்து பெற்று,அதுகுறித்து களத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்படி,சென்னை ஐஐடியுடன் இணைந்து செயலியை உருவாக்க உள்ளோம்.

பருவ மழையை எதிர்கொள்ள பல்வேறு துறைகளுடன் இணைந்தும், கடந்த முறை ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சாலை பாதுகாப்பு ரோந்துப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 12 தலைமையாசிரியர்கள், 10 போக்குவரத்து பணியாளர்கள், 9 போக்குவரத்து காவலர்கள், 20 மாணவர்களுக்கு காவல் ஆணையர் விருது வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x