Published : 01 Aug 2022 07:14 AM
Last Updated : 01 Aug 2022 07:14 AM

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் வலியுறுத்தல்

தாம்பரத்தில் நேற்று நடந்த எஸ்எப்ஐ தென் சென்னை மாவட்ட மாநாட்டை முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் தொடங்கிவைத்தார். உடன் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள்.படம்: எம்.முத்துகணேஷ்.

தாம்பரம்: இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 27-வது மாநாடு நேற்று தாம்பரத்தில் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில் சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆட்சி புரிபவர்கள் அவர்களது கொள்கைக்கு ஏற்ற மக்களை உருவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களை பெற்றோரின் நிலையிலிருந்து கண்டித்து கற்பிக்கின்றனர். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக மாணவர்களிடம் திணித்து கற்பிக்கின்றனர்.

உயர்கல்வியை தொடர்ந்து, பள்ளிக்கல்வி பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை அமித் ஷா வெளியிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார, கலைகளை கற்பிக்க உள்ளனர். இதனை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் மனித சமூகத்திலிருந்தே கல்வி அகற்றப்பட்டு விடும். ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்காது. மக்களை திரட்டி இவற்றை எதிர்த்து போராடுவதை தீவிரப்படுத்த வேண்டும். அந்த பேரியக்கத்துக்கு பின்னால் கல்வியாளர்கள் இருப்போம். இதற்கான முயற்சிகளை இந்திய மாணவர் சங்கம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்தியக் குழு உறுப்பினர் ரா.ஜான்சிராணி, துணைத் தலைவர் ப.க.புகழ்ச்செல்வி, இணைச் செயலாளர் நா.குமரன், மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன்,தாம்பரம் ஒருங்கிணைப்பாளர் வி.தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x