Published : 31 Jul 2022 05:36 AM
Last Updated : 31 Jul 2022 05:36 AM

நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் சமூக நீதி, நியாயம் கிடைக்க நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், விருது வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு ‘பெரியார் ஒளி' விருது, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கு ‘காமராசர் கதிர்' விருது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.செல்லப்பனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்' விருது, எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவிக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது, தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கு 'செம்மொழி ஞாயிறு' விருது வழங்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் இரா.ஜவகருக்கான 'மார்க்ஸ் மாமணி' விருதை, அவரது மகன் டார்வின் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்' விருது, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்.

விழாவில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: இந்த விருதை அம்பேத்கர் பெயரிலும் பெரியார் மண்ணிலும் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிற்படுத்தப்பட்டோருக்காக நான் பணியாற்றுகிறேன் என்பதைக் கண்டறிந்து இந்த விருதை வழங்கியதற்கு நன்றி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போராட்டம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. சமூகத்தில் ஏராளமான வேறுபாடுகளை நாம் காண்கிறோம். சமூகத்தில் ஜாதியை உருவாக்கியவர்கள் சமத்துவமில்லாத நிலையை உருவாக்கியுள்ளனர். அப்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்க முடியும் என்பதால்தான் ஜாதியை அவர்கள் உருவாக்கினர்.

இவ்வாறான வேறுபாடுகள் உள்ளவரை சமூக நீதி, நியாயம் கிடைக்காது. 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளோம். அம்பேத்கர், விளிம்பு நிலையில் உள்ள அனைவருக்கும் சேர்த்து போராடினார். தற்போது நாட்டை ஆள்பவர்கள் கையாலேயே நாடு பிளவுபட்டு கொண்டிருக்கிறது. ஒரு ஆதிவாசி பெண்மணியை குடியரசு தலைவராக்கியதால் சமூக நீதிக்காக போராடுகிறோம் என்கின்றனர் பாஜகவினர். அவர் பதவிக்கு வந்ததில் எனக்குப் பெருமை உண்டு. ஆனால், சமூகநீதி என்னும் பெயரால் அவரை அந்த பதவியில் அவர்கள் அமர்த்தினார்களா என்ற கேள்வி எனக்கு உள்ளது. பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், அம்பேத்கரின் கருத்தை மாற்றுவதற்காகத்தான் ஆட்சிக்கு வந்தோம் என்கிறார். இது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியாமலா கூறியிருப்பார்?

அவர் பிரதமரின் அனுமதியின்றி கூறினால் இந்நேரம் பதவி பறிபோயிருக்கும். பாஜக சமூக நீதிக்கு அரணாக இருக்க முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். 97 ஆண்டுகளில் இதுவரை ஏன் விளிம்புநிலை மக்களை உயர் பதவிக்கு கொண்டு செல்லவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை ஹிட்லருடையது. ஹிட்லர் அமைச்சர்களை பொய் சொல்வதற்காகவே வைத்திருந்தனர்.

அதேபோல் தான் தற்போதும் நடக்கிறது. இவர்களிடத்தில் நாம் இட ஒதுக்கீட்டை எதிர்பார்க்க முடியுமா? இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை. அது பிச்சை கிடையாது. தனியார்மயமாக்குவதிலும் இட ஒதுக்கீடு வேண்டி போராட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பிற்படுத்தப்பட்டோருக்கு நல்ல திட்டங்கள் வகுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பேசுகையில், ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் வலிமை வாய்ந்த கட்சி. தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்த திட்டம் நம்மிடம் இல்லை. அதுகுறித்த தெளிவு திருமாவளவனிடம் உள்ளது. அரசியல் நெருக்கடி நேரத்தில் ஜனநாயகத்தை ஒருங்கிணைத்தால் உரிமைகளை பாதுகாக்க முடியும்" என்றார்.

விழாவில், டெல்லி மாநில அமைச்சர் இராஜேந்திர பால் கவுதம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி எம்எல்ஏ, ஆகியோர் பேசினர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ், திருமாவளவனின் நேர்முகச் செயலாளர் வீர.ராஜேந்திரன், கடலூர் மேற்குமாவட்ட அமைப்பாளர் பரம.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் எழில் கரோலின் நன்றியுரை ஆற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x