Published : 30 Jul 2022 03:55 PM
Last Updated : 30 Jul 2022 03:55 PM

போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்: தி.மலையில் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அதிருப்தி

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக நடத்திய ஆர்ப்பாட்டம் எதிரொலியாக ரயில்வே மேம்பாலம், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. | படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக நடத்திய ஆர்ப்பாட்டம் எதிரொலியாக ரயில்வே மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டன. இதன் எதிரொலியாக, காணொலி காட்சி வாயிலாக, ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து வாகனங்கள் இயக்கப்பட்டன.

செஞ்சி, திண்டிவனம், சென்னை மற்றும் புதுச்சேரி செல்லும் வாகனங்கள் ரயில்வே மேம்பாலம் மீது பயணிக்கிறது. மேம்பாலத்தில் இரு பக்கங்களில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக விழுப்புரம், திருக்கோவிலூர், கடலூர் மற்றும் திருச்சி செல்லும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால், சர்வீஸ் சாலையையொட்டி உள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கம்போல் (மேம்பாலம் கட்டப்படுவற்கு முன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது) போராட்டம் நடத்தவதற்கு கடந்த மூன்று மாதங்களாக காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக இன்று (30-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ள அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

நான்கு வழி சாலையாக இருந்த ரயில்வே மேம்பாலத்தின் தெற்கு திசையில் உள்ள இரு வழி சாலை மற்றும் சர்வீஸ் சாலையை தடுப்புகளை வைத்து மூடினர். கிழக்கு காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை வழியாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், நகர பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டன. மேம்பாலத்தின் ஒரு பகுதி சாலையில், செஞ்சி மார்க்கமாக நகருக்குள் வந்த வாகனங்கள் மற்றும் நகரில் இருந்து வெளியேறிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் திடீரென போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்னர். இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், சரக்கு வாகனங்கள், லாரிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்பட்டது. இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்களின் எண்ணிக்கை சொற்ப எண்ணிக்கையில் இருந்ததால், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல், அவர்கள் திணறினர். பாமக போராட்டம் முடிவுக்கு வந்த பிறகுதான் போக்குவரத்து சீரானது. காலை 11 மணி முதல் மதியம் 1.15 மணி வரை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “திருவண்ணாமலை நகரின் இதய பகுதியாக அண்ணா சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் திகழ்கிறது. இப்பகுதியில் சிறிய நிகழ்வு என்றாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். பாமக இன்று நடத்திய போராட்டத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டது. எனவே எதிர்காலத்தில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதிக்கக்கூடாது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x