Published : 30 Jul 2022 03:27 PM
Last Updated : 30 Jul 2022 03:27 PM

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்தார்: கேரள சுகாதார அமைச்சர்

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த அவர் கடந்த 14-ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, நாட்டிலேயே குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபரான இவருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், “அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இவர்தான் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்பதால், அவருக்கு நோய்த் தொற்று முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதி செய்ய 72 மணி நேரத்தில் இரண்டு முறை சோதனை செய்யுமாறு தேசிய வைரலாஜி மையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அந்த நபருக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு முறையுமே அவருக்கு சோதனை முடிவு நெகடிவ் என்றே வந்தது. தற்போது அந்த நோயாளி உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரது உடலில் இருந்த கொப்புளங்கள் அனைத்துமே முழுமையாக மறைந்துவிட்டன. அவர் இன்றே வீடு திரும்புவார்” என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

அதேபோல், அந்த நபரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளும் நெகடிவ் என்றே வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கேரளாவில் குரங்கு அம்மைக்காக சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளின் உடல்நலனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களது உடல்நலன் சீராகவே இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1980களிலேயே உலகிலிருந்து பெரியம்மை (small pox) ஒழிக்கப்பட்டுவிட்டாலும். அதற்கான தடுப்பூசி பயன்பாடு பரவலாகக் கைவிடப்பட்டதால் ஆர்தோபாக்ஸ் வைரஸ் சற்று உருமாறி தற்போது குரங்கு அம்மையை வீரியம் பெறச் செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x