Published : 29 Jul 2022 03:59 AM
Last Updated : 29 Jul 2022 03:59 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்தார் பிரதமர் - தமிழகத்துக்கும் செஸ்ஸுக்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளதாக பெருமிதம்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மற்றும் முதல்வரிடம் இருந்து கிராண்ட் மாஸ்டர்கள் விஜயலஷ்மி, பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக்சிங் தாக்கூர், எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர். (அடுத்த படம்) மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பத்தை பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். படங்கள்: ம.பிரபு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கோலாகலமான விழாவில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலக சதுரங்க கூட்டமைப்பு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிவிக்கப்பட்டதும், அதை நடத்தும் உரிமையை பெற்றது தமிழக அரசு. இதையடுத்து, ரூ.100 கோடியை ஒதுக்கி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போட்டியை நடத்தவதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ல் தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தனர்.

நேரு உள்விளையாட்டு அரங்குக்கு மாலை 6.24 மணிக்கு பிரதமர் வந்தார். முதல்வர் ஸ்டாலின் 4.52 மணிக்கே விழா மேடைக்கு வந்துவிட்டார். முதல்வர் வந்ததும் அனைத்து நாட்டு வீரர்களின் அணிவகுப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பிரதமர் வந்ததும், தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் நிகழ்த்துக் கலை நடந்தது.

அதைத் தொடர்ந்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அனைவரையும் வரவேற்று பேசினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், எல்.முருகன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் பேசினர். 7.23 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஜூன் 19-ம் தேதி டெல்லியில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ஜோதி, 75 நகரங்களை கடந்து நேற்று முன்தினம் சென்னை வந்தது. இந்த ஜோதியை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர், அதை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். பிரதமரிடம் இருந்து ஜோதியை கிராண்ட் மாஸ்டர்கள் விஜயலஷ்மி, பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் பெற்று அரங்கை வலம் வந்தனர். அதன்பின் அங்கு அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் ஜோதியை ஏற்றினர்.

முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்ததும், இந்திய பெண்கள் அணி, அமெரிக்க அணி பயன்படுத்தும் காய்களின் நிறத்தை பிரதமர் தேர்வு செய்தார்.

பின்னர் போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மிகவும் கவுரவம் வாய்ந்த செஸ் போட்டியானது, அப்போட்டிகளின் இல்லமாக விளங்கும் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நேரத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இது இந்திய சுதந்திர பெருநாள் என்ற மிகவும் முக்கியமான பெருமைமிகு தருணமாகும்.

மிகக் குறைந்த காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து முடித்ததற்காக போட்டி அமைப்பாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் ஆசிய நாடுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான அணிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். 75 சிறப்பு வாய்ந்த இடங்களை, குறிப்பாக 27 ஆயிரம் கி.மீ. தூரத்தையும் கடந்து ஒலிம்பியாட் ஜோதி பயணித்திருப்பதும் இந்த முறைதான். இதன்மூலம் பல இளைஞர்கள் செஸ் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் ஜோதியானது, இனி எப்போதும் இந்தியாவில் இருந்துதான் தொடங்கப்படும். இதற்காக ஒவ்வொரு இந்தியர்கள் சார்பில் பிடே அமைப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில், விளையாட்டுகள் தொடர்பான அழகான சிற்பங்களை நாம் காண முடியும். தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதன் கோயில் திருவாரூரில் உள்ளது. அந்த கோயிலில் கடவுளே சதுரங்கம் விளையாடுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இயற்கையிலேயே தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்கும் இடையில் வலுவான வரலாற்றுத் தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது. அதனால்தான் தமிழகம் இந்தியாவின் செஸ் போட்டிக்கான தலைநகரமாக உள்ளது. தமிழகத்தில் இருந்துதான் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். இது துடிப்பான கலாச்சாரம், உலகத்தின் பழமையான மொழியான தமிழை தாயகமாக கொண்ட பகுதியாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய பெருந்தொற்று காலத்தை உலகம் எதிர்கொண்டது. இந்த காலகட்டம் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியது. அதாவது, நாம் அனைவரும் வலுவாக, ஒற்றுமையாக இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதுதான். அதே உறுதியானது கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இருந்தது. உடல்நலத்தையும் மனநலத்தையும் நாம் பேண வேண்டியதை உணர்த்தியது.

இதனால்தான் ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி களைக் குவித்து வருகிறோம். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என என்னால் உறுதியாக கூற முடியும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்களாக, இளைஞர்களின் சக்தி மற்றும் அதற்கான சூழல் ஆகியவை உள்ளன. கிராமங்கள், சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் இது.

தற்போது 27-வது காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. தற்போது போட்டியில் தோல்வியடைபவர்கள் எதிர்கால வெற்றியாளர்கள். போட்டியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் இந்தப் போட்டியில் பங்கேற்பது சிறந்த நினைவுகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் அனைவரையும் வரவேற்று போட்டியை தொடங்கி வைக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, செஸ் போட்டிகளை தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இன்று முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x