Published : 28 Jul 2022 06:15 AM
Last Updated : 28 Jul 2022 06:15 AM

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும்: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு

சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிப்பதாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்தசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உக்ரைன் போர் காரணமாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

2500 வீரர்கள் கலந்துகொள்ளும் செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தயங்கிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தமிழகம் இந்தப் போட்டியை எடுத்து நடத்த விரும்புகிறது' என்று துணிச்சலாக முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இப்போட்டியை நடத்த தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் காங்கிரஸ் பேரியக்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது, வாழ்த்துகிறது.

விலைவாசி உயர்வு

அதே நேரத்தில் நாட்டில் உள்ள வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், முறையற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பு, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

பிரதமருக்கு எதிரானது

மேலும், தமிழகத்துக்கு எதிராக நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக பேச வைப்பது, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது,மக்களவையிலும், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகிறது

இதுபோன்ற பாஜகவின் கொள்கைகளை எதிர்த்து, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிக்கிறோம். இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்துக்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x