Last Updated : 27 Jul, 2022 04:35 PM

 

Published : 27 Jul 2022 04:35 PM
Last Updated : 27 Jul 2022 04:35 PM

புதுச்சேரி | புத்தகம், சீருடை தராததால் கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம், சீருடை தராததால் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்ததை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிகழ்வில் 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறந்து 1 மாதத்துக்கு மேலாகியும் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை தரப்படவில்லை. மாணவர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கல்வித் துறையை முற்றுகையிட வந்தனர்.

ஊர்வலத்துக்கு தந்தை பெரியார் திக தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலை கழகம் லோகு. அய்யப்பன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ஊர்வலம் கல்வித்துறையை அடைந்தபோது ஒரு சில காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால் போலீஸாரை தள்ளிவிட்டு கல்வித்துறை அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

அங்கே கல்வித்துறை நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த ஆய்வாளர் பாபுஜி உள்ளிட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "அரசுப் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகி விட்டது. ஆனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் மாணவர் பேருந்தை இயக்காமல் ஏழை குழந்தைகளை அவதிக்கு உள்ளாக்குகிறார்கள். பொதுத்தேர்வு எழுத உள்ள குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களே இன்னும் தரவில்லை.

முக்கியமாக சீருடை அரசு தரவில்லை. இவற்றுக்கு நிதி ஒதுக்கியும் செயல்படுத்தவில்லை. மதிய உணவு தரமற்றவகையில் இருப்பதாக குழந்தைகளும், ஆசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர். பலரும் மதிய உணவை சாப்பிட இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு எடுத்து பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம்" என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x