Published : 27 Jul 2022 03:14 PM
Last Updated : 27 Jul 2022 03:14 PM

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லாதது திமுக அரசின் மலிவு அரசியல்: தமிழக பாஜக சாடல்

சென்னை: “சென்னை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாதது திமுக அரசின் மலிவான அரசியலையே வெளிப்படுத்துகிறது” என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் நடைபெறும் சர்வதேச போட்டி குறித்த தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது திமுக அரசின் மலிவான தரம் தாழ்ந்த வக்கிர மற்றும் குறுகிய மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் பொறுப்புள்ள (?) முதல்வருக்கு, சர்வதேச அளவில் நடைபெறும் ஒரு விழாவில், நாட்டின் பிரதமருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியவில்லையே என்பதே மக்களின் கருத்தாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு வகையான விளம்பரங்களை செய்து வருகிறது. இந்த விளம்பரங்களில் எதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் இடம்பெறவில்லை என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே தமிழக பாஜகவினர் சென்னையில் சில இடங்களில் தமிழக அரசு வைத்துள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில், அந்த பேனர்களின் அளவுக்கேற்ப பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பிரதமரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x