Published : 26 Jul 2022 09:47 AM
Last Updated : 26 Jul 2022 09:47 AM

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை எப்போது?

சென்னை: தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை எப்போது அமலுக்கு வரும் என்பதுதான் சாமான்ய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், திமுக தனது தேர்தல் வாக்குறுத்தியில் இதனைக் குறிப்பிட்டு சொல்லியிருந்தது.

இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறைவுபெற்றவுடன் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Company - Tangedco) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டேன்ஜட்கோ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், போதிய அளவில் மின் கட்டண கணக்கீட்டாளர்கள் இல்லாத காரணத்தால் மட்டுமே உடனடியாக பழைய முறைப்படி மாதந்தோறு மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறைக்கு திரும்ப முடியவில்லை. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுவிட்டால் மின் கட்டணத்தை மதந்ததோறும் எளிதாக கணக்கு செய்ய இயலும். இதற்காக பணியாளர்கள் நேரே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் வீடுகளுக்கு நேரடியாக பணியாளர்கள் சென்று மின் கட்டணத்தை கணக்கிடும் முறையே வழக்கொழிந்துவிடும்.

ஸ்மார்ட் மீட்டர்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் டேன்ஜட்கோ தாக்கல் செய்துள்ள மனுவின்படி, சென்னை தி.நகரில் 1.41 லட்சம் போஸ்ட்பெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை கடந்த ஜனவரி 2021 முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரேடியோ ஃப்ரீகுவன்சிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. தி நகரை ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தேர்வு செய்யக் காரணம் அங்கு மக்கள் அடர்த்தி என்பதே. இதுவரை அப்பகுதியில் 82,300 ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்களில் ப்ரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

விவசாயம் மற்றும் குடிசை சேவைகள் தவிர்த்து குறைந்த அழுத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1.66 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். இது ஆர்டிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். மாநில அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கினால் அது மத்திய மின் துறைக்கு அனுப்பப்படும். பின்னர் திட்டம் சென்னையைத் தாண்டி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்று இருக்கிறதா? தற்போதுள்ள தானியங்கி மீட்டர்களிலேயே சிம் கார்டு பொருத்தி அதனை மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் லிங்க் செய்து அதன் மூலம் மின் பயன்பாடு தரவுகளைப் பெற்று நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தை கணக்கிட முடியாது என்று டேன்ஜக்டோவுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதன் தரப்பில், அவ்வாறு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான செலவு ஸ்மார்ட் மீட்டரைப் பொருத்துவதோ ஒப்பிடுகையில் மிகமிக அதிகம். மேலும், மத்திய அரசானது வேறு எந்த உத்தியையும்விட ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதையே வரவேற்கிறது ஊக்குவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x