Last Updated : 25 Jul, 2022 05:39 PM

Published : 25 Jul 2022 05:39 PM
Last Updated : 25 Jul 2022 05:39 PM

“அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓபிஎஸ் அல்ல... திமுகவும் காவல் துறையும் தான்” - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: “அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓ.பன்னீர்செல்வம் அல்ல... திமுகவும், காவல் துறையும்தான்” என்று அதிமுக எம்.பியான சி.வி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ. சக்கரபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் பேசியது: ''ஓராண்டாக ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், அதைக் கேட்கவில்லை.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்றவற்றை தொடர்ந்து செயல்படுத்தாமல் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. அருகில் உள்ள புதுச்சேரி அரசும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. ஆனால், தமிழக அரசு இன்னமும் குறைக்கவில்லை. இந்த ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலம் கட்ட தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் எல்லாம் திமுகவினரின் பினாமியுடையது. அதிமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ 225-க்கு விற்றது. இன்றும் ரூ.525-க்கு விற்கிறது. இந்தியாவில் அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த அரசு இன்றைக்கு மிகப் பெரிய ஒரு தவறை செய்கிறது. அதற்கு காவல் துறை துணை போய் உள்ளது. கூட்டுப் பாலியல் பலாத்காரம் திமுகவின் சாதனை. குறிப்பாக பள்ளி மாணவிகள் வீட்டுக்கு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். மாணவிகள் சுதந்திரமாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கல்வித் துறை தற்போது பாலியல் வன்கொடுமை துறையாக மாறியுள்ளது.

தமிழகம் முழுதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது அனைத்து பள்ளி வளாக முன்பு கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. ஆனால் காவல் துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காவல் துறையை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் திமுக நிர்வாகிகள். போதை பொருட்கள் தமிழகம் முழுவதும் இன்று போதை பொருட்கள் நிரம்பி உள்ளது. இதுதான் இன்று பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளைக்கு காரணமாக உள்ளது.

ஸ்டாலின் அரசு மிகப் பெரிய தவறு செய்துள்ளது. அதற்கு காவல் துறை துணை போயிருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் சூறையாடவில்லை. உண்மையிலேயே சூறையாடியது ஸ்டாலினும், காவல் துறையும்தான். திட்டமிட்டே ஓ.பன்னீர்செல்வத்தை கைகூலியாக வைத்துக்கொண்டு போலீஸ் துணையோடு சூறையாடி சீல் வைத்துள்ளனர். காலம் மாறும், இதற்கு நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓபிஎஸ் போன்று பச்சோந்திகள் இல்லை. நீங்கள் செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். நேரம் வரும், சூழ்நிலை மாறும், மீண்டும் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும். அப்போது ஸ்டாலின் அவர்களே... உங்களையும், உங்கள் பிள்ளையையும் பார்ப்போம், அறிவாலயத்தையும் பார்ப்போம், மறக்க மாட்டோம்.

ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து கலவரம் செய்துவிடலாம், கட்சியை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அவர் தன்னுடைய சுயநலத்திற்காக எதையும், யாரையும் பலிகொடுக்க தயங்க மாட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது சசிகலா, முதல்வர் பதவியை பறித்த பின்னர் சசிகலா மீது கொலைப் பழி சுமத்தியது ஓபிஎஸ் விசாரணை ஆணையம் அமைக்க சொன்னதும் ஓபிஎஸ் தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் அவர் எதையும் செய்ய தயங்க மாட்டார்.

விரைவில் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படும் சென்னையில் குறிப்பிட்ட வழித்தடங்கள் தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இப்போது தமிழகத்தில் ஒரு துறையில் மட்டும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. அறிவுரை சொல்லும் பதவி காலியாக உள்ளது. அதற்கு விண்ணப்பித்தால் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு கார் பங்களா வழங்கப்படும்'' என்று அவர் பேசினார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x