Published : 24 Jul 2022 05:00 AM
Last Updated : 24 Jul 2022 05:00 AM

ரயில்வே சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் - தியாகிகளுடன் மத்திய அமைச்சர் காணொலியில் கலந்துரையாடல்

சென்னை: ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற சுதந்திர ரயில் நிலைய சின்னம் நிறைவு விழாவில், விடுதலைப் போராட்ட தியாகிகளுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலியில் கலந்துரையாடினார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீரத்தைப் போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி வாரவிழா கொண்டாடப்படுகிறது.

தெற்கு ரயில்வே சார்பில் திருவல்லிக்கேணி, வேலூர், திருப்பூர், வாஞ்சி மணியாச்சி, நிலம்பூர் ஆகிய 5 ரயில் நிலையங்களில் ‘சுதந்திர ரயில் நிலைய சின்னம்’ என்ற பெயரில் வாரவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அரிய புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரதியாரின் தியாகத்தை உணர்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டன.

இதன் நிகழ்வின் இறுதி நாளில், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக தமிழகத்தில் திருவல்லிக்கேணி, வேலூர் உட்பட நாடு முழுவதும் உள்ள 75 ரயில் நிலையங்களில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, ‘பாரத் கவுரவ்’ திட்டத்தின்கீழ் மதுரை - வாரணாசிக்கு தனியார் ரயில் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திருவல்லிக்கேணி, வேலூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் இந்த விழா இணையவழியில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் இணைந்து போராடிய வியாசர்பாடியைச் சேர்ந்த தியாகி கருப்பையா(99), மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் தியாகி கருப்பையா பேசும்போது, ‘‘சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கவுரவிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமை யாகவும் உள்ளது. அதேநேரம் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

பெண் சுதந்திரம்

தொடர்ந்து, நிரஞ்சன் பாரதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பாரதியாரின் புகழைக் கூறும் விதமாக ரயில்வே துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண் சுதந்திரம், கல்வி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பாரதியார் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். எனினும், கல்வி மையங்களில் மாணவர்கள் மரணம் என்பது துரதிருஷ்டவசமானது. இத்தகைய சம்பவங்கள் இனியும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x