Published : 22 Jul 2022 07:49 AM
Last Updated : 22 Jul 2022 07:49 AM

உற்பத்தியை நிறுத்திக் கொண்டது ஃபோர்டு தொழிற்சாலை: கடைசி காருக்கு கண்கலங்கியபடி விடை கொடுத்த தொழிலாளர்கள்

ஃபோர்டு நிறுவனத்தின் கடைசி கார்.

மறைமலை நகர்: மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலை, தனது உற்பத்தியை நேற்றுடன் நிறுத்திக் கொண்டது. தாங்கள் தயாரித்த கடைசி காரை அலங்கரித்து கண்ணீர் மல்க ஊழியர்கள் விடைகொடுத்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த ஆலைகளில் ஆண்டுகளுக்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது 80,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மறைமலை நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்தது.

இதனால் அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும் இந்த விவாகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் மீண்டும் உற்பத்தியை தொடங்கினர். ஆனாலும் இம்மாதம் 31-ம் தேதியுடன் ஆலை மூடப்படும் என நிர்வாகம் உறுதியாக அறிவித்ததாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கார்களை இடைவிடாமல் உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலையில் நேற்றுடன் உற்பத்தி முடிவுக்கு வந்தது. இதன்படி நேற்று கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க விடைகொடுத்தனர்.

பல லட்சம் கார்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கும் வெளிநாட்டுக்கும் வழங்கிய இந்த தொழிற்சாலையின் சகாப்தம் வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x